Politics

“உங்க காலில்கூட விழுகிறேன்...” - தனியார் நிறுவன அதிகாரி காலில் விழப்போன நிதிஷ் குமார் - காரணம் என்ன?

பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இந்த சூழலில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக பீகாரில் மட்டும் கடந்த ஜூன் 19 முதல் தற்போது வரை சுமார் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலங்கள் அனைத்தும் 100 ஆண்டுகால பழமை, கட்டிக்கொண்டிருக்கப்பட்டது, கட்டி முடித்து திறப்புக்காக தயார் நிலையில் உள்ளது, கட்டி முடித்து 6 ஆண்டுகள், 10 ஆண்டுகள் இப்படியான பாலங்கள் ஆகும்.

இவ்வாறு தொடர்ந்து இடிந்து விழும் பாலங்கள் குறித்து மாநில அரசு இதுவரை சரியான விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறது. இந்த சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி கடும் விமர்சனம் வைத்து வருகிறார்.

இந்த நிலையில், சாலைத் திட்டப்பணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், பணிகளை விரைந்து முடிக்குமாறு, தனியார் நிறுவன நிறுவன அதிகாரி ஒருவர் காலில் விழப்போன சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜே.பி கங்கா பாதை சாலைத் திட்டப்பணி தொடர்பாக பீகாரின் பாட்னாவில் நேற்று (ஜூலை 10) நிகழ்ச்சி நடைபெற்றது (ஜேபி கங்கா பாதை என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை ஆற்றின் குறுக்கே 4 வழிகள் கொண்ட விரைவுச் சாலை ஆகும்). இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா, எம்.பி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அந்த சமயத்தில் மேடையில் இருந்த நிதிஷ் குமார், தனியார் நிறுவன அதிகாரி ஒருவருக்கு ஜே.பி கங்கா பாதை பாதையை கங்கன் காட் வரை விரிவுபடுத்துவதை விரைந்து முடிக்குமாறு கூறினார்.

அவ்வாறு கூறிய அவர், "உங்கள் காலில் வேண்டுமென்றால் விழுகிறேன்... தயவுசெய்து அந்த வேலையை சீக்கிரம் முடியுங்கள்..." என்று கெஞ்சி கேட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

ஒரு முதல்வர், அரசுப் பணியை விரைந்து செய்யும்படி அதிகாரிகளிடம் கெஞ்சுவது மாநிலத்தின் முதல்வரின் பதவிக்கு இழுக்கு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக நிதிஷ் குமார் இதேபோல, நில பிரச்னைகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு விரைவாகத் தீர்க்க வேண்டும் என ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் கூறி அவரின் காலில் விழப்போன நிலையில், தற்போது மேலும் ஒரு நிகழ்வு இதே போல் நடந்துள்ளது, முதல்வரின் பலவீனத்தை காட்டுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “அமைச்சரவையில் உயர் சமூக உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது பாஜக” - பாஜக MP வேதனை!