Politics

"சிபிஐ நடவடிக்கை என்பது அரசியல் சாசன விதிமீறல்"- மேற்கு வங்க அரசின் கருத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை தங்கள் அரசியல் கட்சியின் அமைப்பாக நினைத்து, எதிர்க்கட்சியினர் மேல் நடவடிக்கை எடுக்க மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதனால் பாஜக தொடர்ந்து அரசியல் ரீதியாக பயனடைந்து வருகிறது.

இதனால் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு தொடர தடை விதிக்கும் சட்டத்தை மேற்கு வங்கம் இயற்றியது. ஆனால், அத்தனையும் மீறி மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வந்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், இதனை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என ஒன்றிய அரசு முறையிட்ட நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு தொடர தடை விதிக்கும் சட்டத்தை இயற்றிய பிறகும் சிபிஐ வழக்கு பதிவு செய்வதை எதிர்த்து மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மேற்குவங்க அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடினார். வழக்கில் மாநில அதிகார வரம்புக்குள் உள்ள வழக்குகளில் ஒன்றிய அரசு அத்துமீறி தலையிடுகிறது, சிபிஐ நடவடிக்கை என்பது அரசியல் சாசன விதிமீறல் என்று மேற்கு வங்க அரசு சார்பில் வாதிடபட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கில் ஒன்றிய அரசு வைத்த வாதங்களை முழுமையாக ஏற்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து என்ன என்ன அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வழக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கும், பின்னர் முதல் வழக்கின் விரிவான விசாரணையை செப்டம்பர் மாதமும் நடக்கும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

Also Read: இரண்டாம் கட்ட 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை தொடக்கம் : தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் !