Politics

“Non Biological பிரதமரின் பதவிக்காலத்தில் ‘0’ மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து” - ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!

பாஜக ஆட்சியமைத்ததில் இருந்தே, மாநில மொழிகளுக்கான அந்தஸ்து குறைந்து வருகிறது. குறிப்பாக அந்தந்த பிராந்திய மொழிகளுக்கான முக்கியத்துவத்தை பாஜக அரசு வழங்காமல் இருந்து வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீட்டில் கூட, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்துக்கு பல கோடி கணக்கில் ஒதுக்கீடு செய்து வருகிறது.

இவ்வாறு பல்வேறு மாநில மொழிகளை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வரும் நிலையில், பாஜக கூட்டணி மாநிலத்தின் மொழியையும் பாஜக தவிர்த்து வருகிறது. மராத்தி மொழியை செம்மொழியாக அறிவிக்க கோரி பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதனையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வளைதள பதிவு வருமாறு :

மராத்தியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.

மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிருத்விராஜ் சவான், Non Biological பிரதமரின் அப்போதைய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான ஸ்ரீபாத் நாயக்குக்கு, கடந்த 11 ஜூலை 2014 அன்று இது குறித்து கடிதம் எழுதியிருந்தார். மே 13 அன்று, பிருத்விராஜ் சவானின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன்.

டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், பின்வருபவை செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன:

1. தமிழ்

2. சமஸ்கிருதம்

3. கன்னடம்

4. தெலுங்கு

5. மலையாளம்

6. ஒடியா

ஆனால் Non Biological பிரதமரின் பதவிக்காலத்தில் 0 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இப்போது செம்மொழி வகைப்பாட்டிற்கான அளவுகோலை இந்த அரசு மாற்ற வாய்ப்புள்ளது. புதிய விதிகள் என்ன?, செம்மொழி அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தற்போது எந்த தெளிவும் இல்லை.

இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மகாராஷ்டிர அரசு விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா? இது மராத்தி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதை தடுக்கும் முயற்சியா? இது லோக்சபா தேர்தலில் NDA படுதோல்வி அடைந்த பிறகு, மகாராஷ்டிர மக்கள் மீது பழிவாங்கும் முயற்சியா ?

ஆனால் ஒரு மொழிக்கு 'செம்மொழி' அந்தஸ்து கொடுப்பது தான் கௌரவம். அதனை மேலும் ஆராய்ச்சி செய்வதற்கும் அதன் வளர்ச்சிக்கும் நிதியுதவியுடன் ஆதரிப்பது வேறு. இதுவரை, இந்த அரசு சமஸ்கிருதத்தை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தது. ஆனால், பிற பாரம்பரிய இந்திய மொழிகளைப் பற்றி என்ன சொல்லலாம், அவை வெறுமனே பிராந்தியமாக இல்லாமல் தேசிய மொழிகளாகவும் உள்ளன. அந்த மொழிகளின் நிலை என்ன ?" என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ”3 மாதத்தில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்” : அமைச்சர் மூர்த்தி தகவல்!