Politics

"ஆகஸ்ட் மாதத்தில் பாஜக அரசு கவிழும்" - RJD தலைவர் லல்லு பிரசாத் கணிப்பு !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழலில் அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்தனர்.

இதனால் கூட்டணியின் தயவில் பிரதமர் மோடி ஆட்சியில் இருந்து வருகிறார். இந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜவுக்கான ஆதரவை விலக்கிகொண்டால் ஆட்சியே கவிழும் நிலை தற்போது உள்ளது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாஜக அரசு கவிழக்கூடும் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் கூறியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "பாஜக மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வருகிறது. டெல்லியில் மோடி அரசு மிக பலவீனமாக இருக்கிறது. ஆகஸ்டில் அது கவிழக்கூடும். இதனால் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதற்காக கட்சித் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.