Politics

“இதுதான் மோடி ஆட்சியில் ஊழலை ஒழிக்கும் லட்சணம்” - செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரே ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமிக்கப்பட்டிருப்பது தான் மோடி ஆட்சியில் ஊழலை ஒழிப்பதன் லட்சணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வாயிலாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

“சில நாட்களுக்கு முன்பு மிகமிக வித்தியாசமாக மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக் கணைகளுக்கு பதில் சொல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஆதாரமில்லாமல் மேலெழுந்தவாரியாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் உரிய பதில் கூறாமல் தட்டிக் கழித்து பிரதமர் மோடி உரையாற்றியதை எவரும் மறந்திட இயலாது. ஆனால், நீட் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல புகார்கள் கடந்த 6 ஆண்டுகளாக இருந்தாலும், நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வு மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலைப் போல விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மாணவர்கள் பதிவு செய்கின்றனர். 2023 இல் அதிகபட்சமாக 1.2 கோடி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் உலகின் இரண்டாவது தேர்வு நடத்தும் அமைப்பாக தேசிய தேர்வு முகமை செயல்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை 15 தேர்வுகளை நடத்துகிறது.

இதில் இந்த ஆண்டு நீட் யூஜி தேர்வில் மட்டும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட் தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். நீட் தேர்வு தொடர்பாக 2018 முதல் 2024 வரை 1100 வழக்குகள் பல்வேறு மாநில நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. நீட் தேர்வு முறைகேடு காரணமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

பொதுவாக, இதுபோன்ற போட்டி தேர்வுகள் நடத்துவதற்காக அமைக்கப்படும் தேர்வாணையங்கள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு முறைப்படி அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படுவது தான் நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் மத்திய பணியாளர்கள் தேர்வாணையம், சி.பி.எஸ்.இ. மற்றும் பல்கலைக் கழக மானியக்குழு போன்றவை செயல்பட்டு வருகின்றன.

ஆனால், இதுபோன்ற முறைப்படியான அமைப்புகள் நடத்தி வந்த நீட், யூ.ஜி.சி. நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவதற்காக தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக தேசிய தேர்வு முகமையை ஒன்றிய பா.ஜ.க. அரசு 2019 இல் அமைத்தது. இந்த முகமையில் நாடு முழுவதும் சுமார் 1.3 கோடி மாணவ - மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அப்படிப்பட்ட கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய தேசிய தேர்வு முகமை என்பது ஒன்றிய அரசு அமைப்பாகத் தான் இருக்கிறது என இதுவரையிலும் கருதப்பட்டது.

நீட் போன்ற போட்டி தேர்வுகளை ஒன்றிய அரசு தான் நடத்திக் கொண்டிருக்கிறது என்று நம்பி அதன்மீது நம்பிக்கை வைத்து கோடிக்கணக்கான மாணவ - மாணவிகள் இரவு பகலாக படித்து தேர்வு எழுதுகின்றனர். இன்னும் பலர் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து லட்சக்கணக்கான பணத்தை கட்டணமாக செலுத்தி நீட் தேர்வு எழுத தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தேசிய தேர்வு முகமை குறித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. இதன்படி, தேசிய தேர்வு முகமை என்பது வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவலாகும். இந்த அமைப்பானது 1860 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான சான்றிதழை முகமையின் இணையதளத்தில் பார்க்க முடியும். இதை வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன ? இந்த முகமையை அமைக்க நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் ஏன் கொண்டு வரப்படவில்லை ? மேலும் இது அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் தெரியவில்லை. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறையின் கீழ் இந்த முகமைக்கும் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், தேசிய தேர்வு முகமை என்பது தனிப்பட்ட சங்கமாக மட்டுமே செயல்படுவதால் இது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் நடைபெறும் தவறுகள் மற்றும் ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது ? இந்த முகமையின் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் தேசிய தேர்வு முகமை தலைவராக இருக்கிற பிரதீப்குமார் ஜோஷி தான். இவர் ஏற்கனவே மத்தியபிரதேச மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து 40 பேரை பலியாக்கிய வியாபம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் சம்மந்தப்பட்டவர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் பரிந்துரை செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. அப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர் தான் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருக்கிறார். இவரை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாதுகாத்து வருகிறது.

427 மசோதாக்களை நிறைவேற்றிய எதேச்சதிகார மோடி அரசு ஏன் தேசிய தேர்வு முகமை குறித்து நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, சட்டம் இயற்றாமல் வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டதன் மர்மம் என்ன ? வியாபம் ஊழலை மிஞ்சுகிற நீட் ஊழலுக்கு பொறுப்பேற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய தேசிய தேர்வு முகமையின் தலைவர் பிரதீப்குமார் ஜோஷியே நீட் ஊழலை விசாரிக்கிற பொறுப்பையும் ஏற்றிருப்பது மிகவும் விசித்திரமாகவும், விந்தையாகவும் இருக்கிறது.

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரே ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமிக்கப்பட்டிருப்பது தான் மோடி ஆட்சியில் ஊழலை ஒழிப்பதன் லட்சணமாகும். இதைவிட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும் ? எனவே, நீட் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலமே 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன்.

Also Read: ”ஜெய்ஷாவுக்காக இனி மைதானத்தை மாற்றாதீர்கள்” - BCCI-க்கு சுட்டிக்காட்டும் ஆதித்யா தாக்கரே!