Politics

நாடாளுமன்றத்தில் கர்ஜித்த ராகுல் காந்தி... பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸால் அச்சுறுத்தல்... பாதுகாப்பு அதிகரிப்பு !

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி ஆட்சிகளின் உதவியோடு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றபோது, எதிர்க்கட்சியினர் பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்தனர்.

குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும், மோடியையும் வெளுத்து வாங்கினார். மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் மோடி ஆடிப்போய் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து மோடி உரையின்போதும், எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனால் மோடியின் முகத்தில் ஒரு பீதியே தெரிந்தது என்று இணையவாசிகள் விமர்சித்து வந்தனர்.

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களைவையிலும் அரசியல் சாசனம் குறித்த மோடியின் பொய் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச சபாநாயகர் அனுமதிக்காததால், எதிர்க்கட்சியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இப்படி அனைத்து பக்கங்களிலும் இருந்து மோடி மற்றும் பாஜகவினருக்கு இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனால் பாஜகவினர் ராகுல் மற்றும் எதிர்க்கட்சியினர் குறித்து அவதூறு பரப்பி வருவதோடு, ஒரு சில பகுதிகளில் போராட்டங்களும் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவையில் ராகுலின் மாஸ் பேச்சுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், பாஜகவுக்கு அது பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். வன்முறையை கையாண்டுள்ளது.

நேற்று (ஜூன் 03) குஜராத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்னர். இதைத்தொடர்ந்து ராகுலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்ததன் பேரில், தற்போது அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருத்துகளோடு மோதாமல், பாஜகவினர் வன்முறையை கையாள்வதாக இணையத்தில் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

Also Read: நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ராஜ்நாத்சிங் : உண்மையை வெளிச்சம்போட்டு காட்டிய ராகுல் காந்தி!