Politics

AIIMS செங்கல் முதல் நீட் போராட்டம் வரை: இளைஞரணி செயலாளராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

கோடிக்கனக்கான தொண்டர்கள் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடைசி தொண்டன் நான் எனத் தன்னை இணைத்துக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை கடந்த வந்த பாதை இதோ..

கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானார். 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார். படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி சேலத்தில் உதயநிதி நற்பணி மன்றத்தை தொடங்கினார். இந்த உதயநிதி நற்பணி மன்றம் இன்றைக்கு தமிழகம் முழுவதும் மாவட்டம், வட்டம், கிளை என பரவி மக்கள் பணியாற்றி வருகிறது.

வெறும் திரைப்படத்தை சார்ந்து மட்டுமே பயணிக்காமல், சமூகப் பணிகளிலும் சளைக்காமல் இம்மன்றங்கள் ஈடுபட்டு வருகிறது. உதாராணமாக ஆங்காங்கே உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள் வழங்குவது தொடங்கி, கொரோனா நிவாரணம் வரை சொல்லிக் கொண்டே போகலாம்.

தி.மு.க-வை பின்பற்றுபவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பதை அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி என அனைவரும் நிரூபித்துள்ளனர். அவர்களின் வழியில் உதயநிதியும் மிஞ்சவில்லை என்பதற்கு ஏற்றாற்போல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்று எளிய மக்களை சந்தித்தார்.

அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் வெற்றிக்காகவும், தமிழக மக்களின் விடியலுக்காகவும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து வெற்றியை பெற்றுத்தந்தார்.

உதயநிதியின் மேடைப் பேச்சுகளால் அப்போதிய நேரத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க ஆளுங்கட்சியே ஆட்டம் கண்ட நிகழ்வுகள் ஏராளம். உதாரணத்துக்கு, உதயநிதி பொய் உரைக்கிறார் என பல மேடைகளில் பதற்றத்துடன் பிதற்றினார் பா.ம.கவின் அன்புமணி. அதுமட்டுமல்லாமல், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியும் பிரச்சாரத்தில் உதயநிதியின் பேச்சுக்கு பதிலளிக்கும் நெருக்கடிக்கு ஆளானார் என்பது வரலாறு.

“அரசியலோடு பிறந்தவன்; அரசியலைப் பார்த்து வளர்ந்தவன்; எனக்கு அரசியல் புதிதல்ல” என்று சொல்லும் உதயநிதி, தாத்தா கலைஞருக்காகவும், தந்தை தளபதிக்காகவும், இவ்விருவரின் படை வீரர்களுக்காகவும் பிரசாரத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பித்திருந்தார்.

கள செயல்பாடுகளில் முக்கியம் போராட்டமே என்ற உண்மையை உணர்ந்து சிறுபான்மை மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் போராட்டத்தினை நடத்தி தொண்டர்களோடு தொண்டனாக கைதாகிறார்.

பின்னர், எதிர்கட்சித் தலைவரும், இன்றைய முதலமைச்சரும், கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர உடன்பிறப்புகளுடம் களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார் அவர்.

அந்தப் பிரச்சாரத்தில் ஒற்றை செங்கல் மூலம் ஒன்றிய பா.ஜ.க அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தினார். தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் இருந்தது.

இந்த சூழலில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டினார்.

உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தனது பிரசாரக் கூட்டங்களில் எய்ம்ஸ் தொடர்பான செங்கல் பிரசாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். அடுத்த நாள் பிரசாரக் கூட்டத்தில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட இன்னொரு செங்கலை எடுத்து வந்த பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

நீட் எதிர்ப்பு போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், புதியக் கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டம், வேளாண் விவசாய சட்டம், பெட்ரொல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என பல போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தினார்.

பின்னர் 2022 டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்நேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன்.

‘விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்’ என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.” எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் தனது செயல்பாடுகளால் தவிரக்க முடியாத இளைஞர்களின் தலைவராக உருவெடுத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி.

அதன்பின்னர் வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றி, முதலமைச்சரின் கையில் வெற்றியை தந்துள்ளார்.

தி.மு.க கழகத்தின் தொண்டன், இளைஞரணிச் செயலாளர், முரசொலி அறக்கட்டளைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், தி ரைசிங் சன் ஆங்கில இதழின் வெளியீட்டாளர் என ஓங்கி உயர்ந்து கழகத்தின் காவல் அரணாக காட்சியளிக்கும் அவர், மக்கள் நலனை என்றும் இதயத்தில் சுமந்திருப்பவர் என்பதை அவரது மக்கள் நலப்பணிகள் உலகிற்கு உணர்த்துகின்றன.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”கழக இளைஞர் அணிச் செயலாளராக இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

உறுப்பினர் சேர்க்கை, கிளை-வார்டுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தது, கைவிடப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைத்தது, கொரோனா கால நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்தது, இரண்டாவது மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதிதோறும் கலைஞர் நூலகம், தேர்தல் பிரச்சாரங்கள்.

மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், இளைஞர் அணியினரைக் களத்தில் உற்சாகப்படுத்தி ஒருங்கிணைக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினுடைய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி. கழகப் பணிகள் அனைத்திலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்! மக்கள் பணி, கழகப் பணியை தொய்வின்றி தொடர்வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மகளிர் தொழில் முனைவோர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு TN - RISE திட்டம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!