Politics

“இந்து ராஷ்டிரத்துக்காகவே பொதுத்துறை அழிக்கப்படுகிறது” - முதல்நாளிலேயே மக்களவையை தெறிக்கவிட்ட ஆ.ராசா MP!

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். பின்னர் மூன்றாம் நாள் நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மக்களவையில் பாஜக ஆட்சியின் அராஜகங்களை எதிர்க்கட்சிகள் தோலுரித்தனர். அந்த வகையில் திமுக மக்களவை எம்.பி-யும், கொறடாவுமான ஆ.ராசா பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதுகுறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசியது வருமாறு :

ஒன்றிய அரசு தனது கருத்துகளை குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரை மூலம் திணிக்க முயல்கிறது. பாசிச கொள்கைகளையே ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. பாஜக ஆட்சியாளர்களுக்கு அவசரநிலை குறித்து பேச எந்த உரிமை கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் பாசிசத்துக்கு எதிராக 2வது முறையாக வாக்களித்துள்ளார்கள்.

300க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம் என்று மோடி கூறினார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்துள்ளார்கள். 240 இடங்களை மட்டும் வைத்துள்ள பாஜக ஆட்சியை எப்படி மெஜாரிட்டி அரசு என்று குடியரசுத் தலைவர் உரை மூலம் கூற முடியும்? மெஜாரிட்டி அரசு என்று கூறுவதே பொய்யானது.

நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பினோம். இன்னும் ஏற்கப்படவில்லை. நீங்கள் தமிழ்நாட்டை மதிக்கவில்லை. எங்களை குப்பைத் தொட்டி போல் நடத்துகிறீர்கள். அதனால்தான் தமிழ்நாடு 40 தொகுதிகளிலும் உங்களை தோற்கடித்து பாடம் கற்பித்துள்ளது!

உலகம் முழுவதும் தொழில் பிரிவினை இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது. இதைத்தான் பெரியாரும் அம்பேத்கரும் சொல்கின்றனர். இந்தப் பிரிவினையைத்தான் இந்து மதம் என்கிற பெயரில் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள்!

பொதுத்துறையில் லாபம் இல்லை என எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் சாதியினருக்கும் எப்படி அரசு வேலை கிடைக்கும்? இட ஒதுக்கீட்டை மறைமுகமாக அழிக்கவே நீங்கள் இதை செய்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உயர்சாதிகள் நடத்தும் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்.

நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை ஒன்றிய அரசு கிரப்பில் போட்டுள்ளது.

முகலாயர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் எனில், ஆரியர்கள் மட்டும் யார்? அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான். இதனால்தான் இந்திய நிலத்தை உரிமைக் கொண்டாடும் அருகதை கொண்டவர்கள் திராவிடர்கள் மட்டும்தான் என்றார் அம்பேத்கர்!

பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் அனைவரும் சமமாக வாழவும், உயர்கல்வி பெறவும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரே காரணம். எனவே திராவிட கொள்கைகள் ஏன் நாட்டுக்கு தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

அதானி மோசடி விவகாரத்தில் பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. எதிர்க்கட்சிகள் 15 நாட்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்து எதிர்ப்பை தெரிவித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. முறைகேடுகளுக்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கும் அரசு இதுவரை நான் பார்த்ததில்லை.

Also Read: “அதானிக்கு அந்த கடவுள்தான் கொடுக்க சொன்னாரா?” - முதல் உரையிலேயே பாஜகவை அலறவிட்ட ராகுல் !