Politics
நீட் ஒழிப்பு போராட்டம் : ஜூலை 15-ல் திராவிடர் கழகம் சார்பில் இரு சக்கரப் பிரச்சாரப் பயணம் - கி.வீரமணி !
கரோனாவைவிட கொடிய ‘நீட்’டை ஒழிக்கத் திராவிடர் கழகம் மேற்கொண்டுவரும் ‘நீட்’ ஒழிப்புப் பணிக்கு ஒத்துழைப்புத் தாரீர் என்றும், ஜூலை 11 ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரை திராவிடர் கழகம் நடத்தும் தமிழ்நாடு தழுவிய இரு சக்கரப் பிரச்சாரப் பயணம் ஜூலை 15 அன்று சேலத்தில் சங்கமிக்கும் என்றும், ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகிற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை பின் வருமாறு :
‘நீட்’ என்ற மருத்துவப் படிப்பு, மேற்பட்டங்கள் படிப்பு களுக்குத் திணிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ‘‘தேசிய தேர்வு முகமை'' என்ற ஒன்றின்மூலம் – கடந்த எட்டு ஆண்டு களுக்கும்மேல் நடைபெற்று வரும் தேர்வுகளில் ஊழல் கொடி கட்டிப் பறப்பதோடு, நாற்றமெடுத்து நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோரும் கொதித்துக் கொண்டுள்ளனர்!
‘நீட்'டால் இருபால் மாணவர்களின் உயிர்ப் பலி! :
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலாத நிலையில், பல மாநிலங்களில் இளம் மாணவர்கள், மாணவிகள், பெற்றோரின் உயிர்களையும் பலி வாங்கிடும் ஒரு கொடுமையான வாள் ‘நீட்’ – அதன் பிறவி ஊழல்கள் படமெடுத்தாடி பழிதீர்த்து வருவது ஒருபுறம்.
மற்றொருபுறம் பல்லாயிரக்கணக்கில் இந்த ‘நீட்’ தேர்வை மூலதனமாக்கிக் கொண்டு ‘கோச்சிங் சென்டர்’ என்பதன்மூலம் ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகளின் பிள்ளைகளின் – பெற்றோர்களின் வாழ்வாதாரத்தையே, ரத்தம் குடிக்கும் அட்டைபோல லட்சக்கணக்கில் பகற்கொள்ளை நடைபெறுகிறது.
கேள்வித்தாள்களை விற்றும், ஆள் மாறாட்டம், முறைகேட்டுக்கு வாய்ப்பாக குறிப்பிட்ட தேர்வு மய்யம் தலைதூக்கி நிற்கிறது. (அதில் ‘குஜராத் மாடல்’ தான் முன்னணியில் இருக்கிறதோ என்ற அய்யம் கிளம்பியுள்ளதால் மிகவும் வேதனையும், வெட்கமும் அடையக் கூடிய ஒன்று). குஜராத்தில் குறிப்பிட்ட சென்டரில் ஏராள முறைகேடுகள்.
‘நீட்’ தேர்வு நுழைகிறபோது அதனைக் கடுமையாக எதிர்த்த முதலமைச்சராக குஜராத் முதலமைச்சர் மோடி இருந்தார்; இன்று அவரே அதன் திணிப்புக்கும், ஊழல்கள் வெளிப்படையான பனிப் பாறைகள் வந்துள்ள நிலையிலும், மவுனம் சாதிப்பதோடு, அரசமைப்புச் சட்ட விரோதமான இந்தத் தேர்வு முகமையை விடாமல், கட்டிப் பிடித்து, இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தை இருட்டறையாக்கும் நிலையே நீடிக்கிறது.
முதன்முதலில் இதன் கொடுமையை – வழமைபோல் – தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் – ‘நீட்’ நுழையும்போதே அதன் ஆபத்தான விளைவு களை – விளக்கி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (29.12.2010).
‘நீட்’டை ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சரின் பாராட்டத்தக்க தொடர் பணிகள்! :
மாநில அரசியல் களத்தில் இன்றுள்ள தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று, எதிர்க்கட்சித் தலைவராக சிறப்புடனும், பொறுப்புடனும் தமது கடமையைச் செய்த நமது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைவரையும் இணைத்து தமிழ்நாட்டின் எதிர்ப்பு முழக்கத்தை நாடறியக் கொண்டு சென்றார்.
இன்றும் அப்பணியில் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஓய்ந்ததே இல்லை.
திராவிடர் கழகமான தாய்க் கழகம் ஒரு சமுதாய இயக்க மாதலின் இடையறாத அடைமழைப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் செய்தும், பல போராட்டங்களை ‘நீட்’டுக்கு எதிராகத் தொடர் போராட்ட பிரச்சார பெருமழை யாகப் பெய்து வருவதும் நல்ல வண்ணம் முதல் வெற்றியைத் தந்துள்ளது.
‘நீட்’ ஒழிப்புக்காக இந்தியாவின் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடிக்கின்றன! :
இந்தியா முழுவதிலும் உ.பி. முதல் பல வடபுலங்கள், தென்மாநிலங்கள், குஜராத், மகாராட்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள், ஹிந்தி பேசும் மாநிலங்களான டில்லி, அரியானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், மேற்குவங்கம், பீகார், ஒடிசா உள்பட பல மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் பாதிக்கப்பட்ட காரணத்தால், நீட் எதிர்ப்புக் குரல் எங்கும் ஓங்கிப் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது!
தமிழ்நாடு – தி.மு.க. அரசு இரண்டுமுறை (இப்போது மூன்றாவது முறை தீர்மானமாகவும்கூட) தனி சட்ட மசோதாவாக – விலக்கு அளிப்பதுபற்றி ஜனநாயக முறையில் சட்டமன்றத்தில் – அதற்கு அதிகாரம் இருக்கும் காரணத்தால், நிறைவேற்றி அனுப்பியது.
இங்குள்ள ஆளுநர், தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதி, இறுக்கிக் கிடப்பில் சில காலம் போட்டார்; மக்கள் கிளர்ச்சிமூலம் வாங்கிய ‘அரசியல் குட்டுகள்’ காரணமாக, வேறு வழியின்றி, இறுதியில், ‘‘தான் ஒரு தபால்காரர் மட்டுமே’’ என்பதை உணர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி, அங்கே உள்துறை அமைச்சகத்தில் அது முடிவு அறிவிக்கப்படாமல் உள்ள அவலம் இன்னமும் தொடர்கிறது!
உச்சநீதிமன்றமும் கடுமையான கேள்விகள்! :
மீண்டும் காங்கிரஸ் கட்சி உள்பட அடங்கிய இந்தியா கூட்டணியும், பல கட்சிகளும், இன்று இந்த ‘நீட்’ தேர்வு, ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும், கார்ப்பரேட் கொள்ளையர்களின் வசதி படைத்த கூடாரமாகவும் இருப்பதைப் புரிந்துகொண்டு, எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்து வருகின்றன.
மீண்டும் வீண் பிடிவாதம் – வறட்டு ஜம்பத்தைக் காட்டி வருகிறது – ஒன்றிய பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்றமும் 'நீட்' ஊழல்பற்றி கடுமையான குரலில் கேள்விகளை கேட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்விலிருந்து ‘‘தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடுக’’ என்று கோரும் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து, ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மக்களின் பாராட்டு குவிந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல், எட்டு மாநில முதலமைச்சர்களுக்கும் நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தனித்தனியே கடிதங்களை எழுதி, ‘நீட்‘ தேர்வை ரத்து செய்யவோ அல்லது விரும்பும் மாநிலங்கள் மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று கடிதமும் எழுதி காலத்தாற் தேவைப்படும் கடுமையையும் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
திராவிடர் கழகத்தின் ‘நீட்’ ஒழிப்புத் தொடர் பணிகள் - ஜூலை 15 இல் சேலத்தில் சங்கமிப்போம்!:
திராவிடர் கழகம் ‘நீட்’ தேர்வு ஒழிப்பிற்கான அதன் தொடர் பணியாக வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகனப் பிரச்சார ‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சார பணிகளை 5 அணிகளாக தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகள், சிற்றூர், பேரூர் எல்லாம் பிரச்சாரம் செய்து, சேலத்தில் கல்வி வள்ளல் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி அன்று நிறைவு செய்ய உள்ளது.
புதிய கோணத்தில் சட்டப் போராட்டத்திற்கும் அது ஆயத்தமாகி உள்ளது! :
‘நீட்’ தேர்வு என்ற இந்தப் பலி பீடம் மூடப்படுகிற வரை இடையறாத போராட்டம் நடத்தி, அதற்கு எந்த விலையும் கொடுக்கவும் திராவிடர் கழகம் எப்போதும் தயாராக இருக்கும். அனைவருக்கும் இக்கொடுமையின் கோரத்தின் வடிவத்தை விளக்கிப் போராடி, வெற்றி பெறும் வகையில் அறப்போர்க் களத்தில் என்றும் சலிப்பில்லாத சமராக அதனை நடத்த, அனைத்துப் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படவிருக்கிற அத்துணை பேரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
கோவிட் – 19 என்ற கரோனா தொற்றைவிட ஆபத்தானது – இந்த ‘நீட்’ தேர்வு! அரசமைப்புச் சட்ட விரோத இந்த ‘நீட்’ தேர்வு கல்லறைக்குப் போகும்வரை நம் பணி ஓயாது! ஓயாது!! ஓயவே, ஓயாது!!! இது உறுதி! உறுதி!! உறுதி!!!
‘நீட்’ தேர்வை மாற்றி, ‘‘பழைய முறைதான்; புதிய வர்ணம்'' என்றெல்லாம் திருத்தி நீடிக்க யோசித்தால், அது மூளைச்சாவை அடைந்தவருக்கு மற்ற சிகிச்சை தந்து அமர வைக்கும் அர்த்தமற்ற போக்கு போன்றதேயாகும்!
எனவே, அடியோடு ‘நீட்’ தேர்வைக் கைவிட்டு, மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதே சரியான அரசமைப்புச் சட்ட அணுகுமுறையாகும்!
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!