Politics

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி... மீண்டும் பூதாகரமான ஓம் பிர்லாவின் மகள் தேர்ச்சி விவகாரம் !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற மருத்துவ இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற NET தேர்விலும் வினாத்தாள் கசிந்துள்ள சம்பவம் வெளியானது. இதையடுத்து அந்த தேர்வை ரத்து செய்த ஒன்றிய அரசு, நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது. தொடர்ந்து அடுத்தடுத்து என முறைகேடுகள் அம்பலமாகி வரும் நிலையில், தற்போது சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் upsc தேர்வு தேர்ச்சி குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஒன்றிய பாஜக ஆட்சியில் இரண்டாவது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது மகளான அஞ்சலி பிர்லா மாடல் துறையில் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு UPSC தேர்வு எழுதிய அஞ்சலி, தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

UPSC தேர்வு மிகவும் கடினம் என்று அனைவர்க்கும் தெரியும். இதில் இருக்கும் 3 சுற்றுகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றாலும், மீண்டும் முதலில் இருந்து வர வேண்டும். அவ்வாறு இருக்க, இங்கு பலரும் இந்த தேர்வு பலமுறை எழுதியும் தேர்ச்சி பெற முடியாமல் தாவித்தாவி வரும் நிலையில், ஒரு மாடல் துறையில் இருக்கும் ஒருவரால் எப்படி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடிந்தது என்று அப்போது தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தது.

எனினும் அதனை எல்லாம் கடந்து தற்போது அஞ்சலி, இரயில்வே அமைச்சகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் அவர் தேர்வு எழுதாமலே IAS ஆகியுள்ளதாக இணையத்தில் போலி செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் அவர் 2019-ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதே உண்மை. எனினும் இந்த தேர்ச்சி என்பது நியாயமாக நடைபெற்றதா என்று அப்போது எழுந்த சந்தேகம், தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

ஒன்றிய பாஜக அரசு நடத்தும் அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடந்து வருவது அம்பலாமாகி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த ஒருவரது மகள் ஒரே முயற்சியில் கடினமான UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறித்து இணையவாசிகள் மீண்டும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Also Read: “எமெர்ஜென்சி காலத்தில் எங்களுக்கு மோடி, நட்டா எல்லாம் யார் என்றே தெரியாது” - லாலு பிரசாத் யாதவ் பளீச் !