Politics

நீட் முறைகேடு - ராகுல் காந்தியை பேச விடாமல் மைக் துண்டிப்பு : ஒன்றிய அரசு அராஜகம்!

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர்ந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கியது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்றதை அடுத்து நேற்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதையடுத்து இன்று நாடாளுமன்றம் கூடியது. இதற்கு முன்னதாக நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

இன்று மக்களவை தொடங்கிய உடனே சபாநாயகர் ஓம் பிர்லா, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுத்தார். பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் மாநிலங்களவையிலும் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் மாணவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நீட். அதனை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது மைக் துண்டித்து பா.ஜ.க அரசு அராஜகத்துடன் நடந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி,”நீட் பிரச்சினை குறித்து விவாதம் வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை இது என்பதால், முறையாக விவாதிக்கப்பட வேண்டுமென பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும். இந்திய அரசாங்கமும் எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து மாணவர்களின் நலன் குறித்து பேசுவதாக பதிவு செய்யப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: நாடாளுமன்றத்தில் கடும் அமளி : நீட் முறைகேட்டில் விவாதம் செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு!