Politics

150 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... வெளியே வந்த ஹேமந்த் சோரனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு !

நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பிய நிலையில், ஆரம்பத்தில் சம்மனை புறக்கணித்து வந்தார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி அவர் நேரில் ஆஜரானபோது, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். பாஜகவின் சூழ்ச்சி அறிந்த ஹேமந்த் சோரன், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஜார்க்கண்டில் அமைந்துள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 150 நாட்களுக்கு பிறகு (5 மாதங்கள்) ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார்.

இதனிடையே ஹேமந்த் சோரனின் இரத்த உறவினர் ராஜாராம் சோரன் கடந்த ஏப். 30-ம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுக்காக மே 6-ம் தேதி (ஒரு நாள் மட்டும்) ஜாமீன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவருக்கு அம்மாநில மக்கள் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சியினரை குறி வைத்து ED, CBI உள்ளிட்டவைகளை ஏவி மிரட்டி அடிபணிய வைக்க முயன்று வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் இந்த சூழ்ச்சியில் ஒரு சில தலைவர்கள் கட்சித்தாவல், கூட்டணி மாறுதல் என இருந்தாலும், ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற மிகவும் பலமான தலைவர்கள் பல கட்ட சோதனைகளுக்கு பிறகும் பாஜகவுக்கு அடிபணியாமல் உறுதியுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா : GK மணியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்!