Politics

“இந்தியா” - இந்து இராஷ்டிரம் அல்ல! : பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்!

உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரும், பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், தற்போதைய அரசியல் சூழலில், பா.ஜ.க சந்தித்த வீழ்ச்சி குறித்து, தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் சமம் என்ற சமத்துவ மனப்பாண்மையை அடிப்படையாக வைத்து செயல்படும், இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றத் துடிப்பவர்களான பா.ஜ.க.வினருக்கு, மக்களவை தேர்தல் முடிவுகள் வழி கொடுக்கப்பட்டிருக்கிற அடி குறித்து, அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்ததாவது,

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றும் முயற்சிகள் சரியானது அல்ல என்பதையும், இந்தியா ஒரு இந்து இராஷ்டிரம் அல்ல என்பதையும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உணர்வு எழுவது உண்மை. எனினும், மக்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பதும் மற்றும் ஏழை - பணக்காரர் இடைவெளியை அதிகரிப்பதும் இந்தியாவில் தொடரவே செய்கின்றன. இவை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக எனது இளமை காலத்தில், எனது உறவினர்கள் பலர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டது போல, தற்போதும், பாஜக அரசாங்கத்தின் கீழ் அந்நடைமுறைகள் தொடர்வது கவலைக்குரிய செய்தியாகவே உள்ளது.

இந்தியாவை, இந்து நாடாக சித்தரிக்க ஏராளமான பணம் செலவழித்து ராமர் கோவில் கட்டப்பட்டது. ஆனால் இந்தியாவை “இந்து இராஷ்டிரம்” என்று சித்தரிக்கும் சம்பவங்கள் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கட்டமைத்த நாட்டில் நடக்காது என்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் உண்மையான அடையாளத்தை மறைக்க முயன்றதே, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியை பாஜக இழக்கக் காரணமாக அமைந்தது.

இந்தியாவின் உண்மையான அடையாளத்தை மாற்றும் அனைத்து முயற்சிகளையும் நாடு எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.

Also Read: நாடாளுமன்றத்தில் கடும் அமளி : நீட் முறைகேட்டில் விவாதம் செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு!