Politics

தற்காலிக சபாநாயகர் : “சுரேஷை போல் ரமேஷும் தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா?” - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி !

நாடளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 24) காலை கூடுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் கூடும் இந்த கூட்டத்தொடரில், எம்.பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துகொள்வர்.

தொடர்ந்து 2 நாட்களாக நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மாநில வாரியாக எம்.பி-க்களின் பதவி பிரமாணம் நடைபெறும். இந்த சூழலில் பதவி பிரமாணம் சபாநாயகர் இல்லாமல் நடைபெறாது. எனவே ஒவ்வொரு முறையும் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுவது நியதி. அந்த வகையில் மக்களவையில் யார் அதிக முறை எம்.பி-யாக இருந்தாரோ அவரே நியமிக்கப்படுவதும் வழக்கம்.

ஆனால் பாஜகவோ, தற்காலிக சபாநாயகர் பதவியை பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் (Bhartruhari Mahtab) என்பவருக்கு வழங்கியுள்ளது. இதற்கு தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது. எனினும் அதிலிருந்து பாஜக பின்வாங்கவில்லை. அனுபவத்தில் மூத்தவர் என்ற அடிப்படையில் கேரளா காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் 8-வது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். அவரையே தற்காலிக சபாநாயகராக நியமித்திருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவோ 7-வது முறையாக எம்.பியாக இருக்கும் பர்த்ருஹரி மஹ்தாப்பை அறிவித்துள்ளது. கே.சுரேஷ் நியமிக்கப்படாததற்கு அவர் தலித் என்பது தான் காரணமா? என்று பலரும் பாஜகவுக்கு கேள்வி எழுப்பி விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு பாஜக தரப்பு பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், அதே பாஜகவை சேர்ந்த தலித் எம்.பி ஒருவருக்கு இந்த தற்காலிக சபாநாயகர் ஏன் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

"8-வது முறையாக எம்.பி-யாக இருக்கும் கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக இருந்திருக்க வேண்டும். ஆனால், பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப், தொடர்ந்து 7-வது முறையாக எம்.பி-யானதால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அப்படி இருப்பினும், பர்த்ருஹரி மஹ்தாப்பை போல் தொடர்ந்து 7-வது முறையாக பாஜகவை சேர்ந்த ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி ஏன் பரிசீலிக்கப்படவில்லை? சுரேஷைப் போல் அவரும் தலித் என்பதாலா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவை சேர்ந்த ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி, கர்நாடகாவின் பிஜப்பூர் (தனித்தொகுதி) எம்.பி ஆவார். ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி ஒடிசாவில் கட்டக் தொகுதி எம்.பி ஆவார். இருவரும் மக்களவையில் 7-வது முறையாக எம்.பியாக பதவியேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அப்போ ‘பக்குவம் இல்லை’... இப்போ.... மீண்டும் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட மாயாவதியின் மருமகன் - காரணம்?