Politics

நாளை கூடுகிறது மக்களவை : தற்காலிக துணை சபாநாயகர் பதவியை நிராகரித்த இந்தியா கூட்டணி - காரணம் என்ன ?

நாடளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 24) காலை கூடுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் கூடும் இந்த கூட்டத்தொடரில், எம்.பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துகொள்வர்.

தொடர்ந்து 2 நாட்களாக நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மாநில வாரியாக எம்.பி-க்களின் பதவி பிரமாணம் நடைபெறும். இந்த சூழலில் பதவி பிரமாணம் சபாநாயகர் இல்லாமல் நடைபெறாது. எனவே ஒவ்வொரு முறையும் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுவது நியதி. அந்த வகையில் மக்களவையில் யார் அதிக முறை எம்.பி-யாக இருந்தாரோ அவரே நியமிக்கப்படுவதும் வழக்கம்.

பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப்

ஆனால் பாஜகவோ, தற்காலிக சபாநாயகர் பதவியை பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் (Bhartruhari Mahtab) என்பவருக்கு வழங்கியுள்ளது. இதற்கு தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது. எனினும் அதிலிருந்து பாஜக பின்வாங்கவில்லை. அனுபவத்தில் மூத்தவர் என்ற அடிப்படையில் கேரளா காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் 8-வது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். அவரையே தற்காலிக சபாநாயகராக நியமித்திருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவோ 7-வது முறையாக எம்.பியாக இருக்கும் பர்த்ருஹரி மஹ்தாப்பை அறிவித்துள்ளது. கே.சுரேஷ் நியமிக்கப்படாததற்கு அவர் தலித் என்பது தான் காரணமா? என்று பலரும் பாஜகவுக்கு கேள்வி எழுப்பி விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு பாஜக தரப்பு பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை. மேலும் விதிமுறைகளை மீறி, பாஜக எம்.பி நியமிக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து, தற்காலிக துணை சபாநாயகர் பதவியை இந்தியா கூட்டணி நிராகரித்துள்ளது. 8-வது முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்படாததை கண்டித்து தற்காலிக சபாநாயகர் பொறுப்பை இந்தியா கூட்டணி கட்சிகள் நிராகரித்துள்ளது.

7-வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல் துணை சபாநாயகராக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்தியாயா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த சூழலில் விதிமுறைகளை மீறி, பாஜக எம்.பி தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை இந்தியா கூட்டணி கட்சிகள் நிராகரித்துள்ளன.

Also Read: தற்காலிக சபாநாயகர் : “சுரேஷை போல் ரமேஷும் தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா?” - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி !