Politics

பீகார் அரசு வழங்கிய 65% இடஒதுக்கீடு ரத்து : சட்டவிரோதமானது என பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்வெளியிடப்பட்டது. அதில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சாதி ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் பீகாரில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக ஆக உயர்த்தப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்ர். தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு பாட்னா உயர் நீதிமன்றத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், 65 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பீகார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றம், அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது என்றும் கூறி மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

Also Read: ஒரே கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் : தொடர்ந்து வெளிவரும் நீட் தேர்வின் குழப்பங்கள் !