Politics

மம்தா பானர்ஜீயுடன் பேசிவரும் 3 பாஜக MP-க்கள் ? கட்சி மாற திட்டமா ? - மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது.பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழல் இருந்த நிலையில், அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்தனர்.

ஆனால் பாஜக கூட்டணிக்கு தற்போது வரை 300 இடங்கள் கூட இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை விலகிக்கொண்டால் எந்நேரமும் ஆட்சி கவிழலாம் என்ற நிலையே உள்ளது. இந்த நிலையில், பாஜக எம்.பி.திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜீயை சந்தித்துள்ளது அரசியலில் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜீ தனது மாநிலத்தில் உள்ள கூச்பெஹாரின் மதன் மோகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜீயை பாஜகவின் மாநிலங்களவை எம்பி நாகேந்திர ராய் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து நாகேந்திர ராய்க்கு நெருக்கமான பாஜக எம்.பி.க்கள் 3 பேர் அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் பரவியது. இதனால் பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. பாஜக எம்.பி.க்கள் 3 பேர் தங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக சில திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

Also Read: பருவமழைக்கு தாங்காத நாட்டின் நீளமான கடல்வழி பாலம்: மோடி திறந்து வைத்த 6 மாதத்தில் விரிசல் விழுந்த சோகம் !