Politics

பருவமழைக்கு தாங்காத நாட்டின் நீளமான கடல்வழி பாலம்: மோடி திறந்து வைத்த 6 மாதத்தில் விரிசல் விழுந்த சோகம் !

இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக திகழும் மும்பையின் மும்பை நகர்ப்பகுதியையும் நவிமும்பை பகுதியையும் இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 5 வருடமாக நடந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடையும் வகையில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்டமாக இந்த கடல் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தினை கடந்த ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம் ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறந்த பின்னர் அதில் பயணிக்க சுங்கச்சாவடி மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் சாதாரண பொதுமக்கள் இதில் பயணம் செய்ய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இந்த அடல் சேது பாலம் திறக்கப்பட்டு 6 மாதத்திலேயே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பருவமழை பெய்த நிலையில், அதனை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த பாலம் சேதமடைந்துள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், கட்டுமான குறைபாடே இந்த சேதம் ஏற்பட காரணம் என்று கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த விரிசல்களை பார்வையிட்ட மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் "இந்த விரிசல்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தில் இருப்பதைக் குறிக்கிறது" என்று கருத்து தெரிவித்தார்.

Also Read: பீகார் அரசு வழங்கிய 65% இடஒதுக்கீடு ரத்து : சட்டவிரோதமானது என பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு !