Politics

குஜராத்திலும் கோவிலாக மாறும் மசூதி : எதிர்குரல் எழுப்புவோர் சிறையில் அடைக்கப்படும் அவலம்!

அறிவியல் வளர்ச்சி காண்பதற்கு முன்பே, இந்தியாவில் ஆங்கிலேயர் ஊடுருவல்களுக்கு முன்பே, கட்டி எழுப்பப்பட்ட இஸ்லாமிய மத ஆலையங்களை, தற்போதைய அரசியலை வைத்து தனதாக்க துடித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.

அதற்கு முதன்மை உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி பகுதியில் அமைந்திருந்த பாபர் மசூதி 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றாலும், அதற்கு முன்பு அங்கு தான் ராமர் பிறந்தார் என்ற சர்ச்சை கருத்துடன், தகுந்த ஆதாரங்களற்று, கட்டி எழுப்பப்பட்டது தான் ராமர் கோவில்.

எனினும், ஒரு மதத்தை நசுக்கி, மற்ற மதத்தை வளர்க்க வேண்டிய தேவை இல்லை என்ற இறையாண்மையை உணர்ந்த எதிர்கட்சி தலைவர்களும், ராமர் கோவில் கட்டப்பட்ட நடைமுறை விமர்சிக்கும் வகையில் அமைந்தாலும், அதனை தகர்க்கும் எண்ணமில்லை என தெரிவித்தனர்.

ஆனால், எதிர்கட்சிகளின் இந்த இறையாண்மை சார்ந்த கருத்தியலையும், தங்களுக்கு சார்பாக பயன்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.

அவ்வகையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி பகுதியில் பாபர் மசூதி இடிப்பு முடிந்துவிட்டது, மதுரா பகுதியில் உள்ள ஷாஹி இட்கா மசூதி இடிமானம் தொடர்பான நடவடிக்கைகள் இறுதி நிலையை அடைந்துவிட்டன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்துவானி பகுதியில் அமையப்பெற்றிருந்த இஸ்லாமிய ஆலையத்தையும், இஸ்லாமிய கல்விச்சாலையையும் தகர்த்து, அங்கு காவல் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டு விட்டன.

அடுத்ததாக குஜராத் மாநிலத்தின் பிரானா பகுதியில் அமைந்துள்ள பீர் இமாம்ஷா பாவாவின் ஆலையத்தை தகர்த்து, அங்கும் ஒரு கோவில் கட்டினால் தான் சரியாக இருக்கும் என மதவாத நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்த இமாம்ஷா தகர்ப்பு நடவடிக்கையும், பாபர் மசூதி இடிப்பு நடந்த 1992ஆம் ஆண்டிலிருந்தே, திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, தனது வேலையை வெற்றிகரமான செயலாற்றியுள்ளது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான பீர் இமாம்ஷா பாவாவின் மசூதி, தர்கா ஆகியவற்றிற்குள் புகுந்து, ஆலைகளின் பெயர்களை மாற்றி, அதனை ஒரு இந்து மத ஆலையத்தின் பகுதியாகவே மாற்றியது தான், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் அவ்வெற்றிச்செயல்.

இது குறித்து, பீர் இமாம்ஷா தலைமுறையினரான சாஹித் தாஹிர் உசைன், “எங்களது பண்பாட்டு பகுதியை நாங்கள் எவ்வளவு தான் போராடினாலும், வென்று மீட்க இயலவில்லை. எங்களுக்கு உதவவும் யாரும் முன்வரவில்லை.

காவல்துறையினரே, நீதிமன்றங்களை நாடுங்கள், எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கைவிரிக்கின்றனர்.

இமாம்ஷாவின் இந்து பின்பற்றாளர்களே, இந்த கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும், மத அடக்குமுறை குறைந்தபாடில்லை” என தெரிவித்துள்ளார்.

இதனால், இச்சம்பவத்தையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வினருக்கு எதிராக எழுந்திருக்கிற மாற்றம், விரைவில் குஜராத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு புறம் அதிகரித்தாலும்,

பா.ஜ.க.வின் மதவாத அடக்குமுறைக்கு எதிர்ப்புகள், தேசிய அளவில் வலுக்கத்தொடங்கியுள்ளன.

Also Read: காலநிலை மாற்றத்தை தாங்கும், வெள்ளத்தை தணிக்கும் திட்டம்! : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!