Politics

தகுதியற்ற அமைச்சர்களுக்கு பதவி நீட்டிப்பு செய்திருக்கும் பா.ஜ.க! : 18ஆவது மக்களவையில் உருவான சர்ச்சை!

சர்ச்சைக்குரியவர்களை மட்டுமே, அமைச்சர்களாக நியமிப்போம் என்பதில் தெளிவாக இருக்கிறது பா.ஜ.க.

காரணம், கடந்த ஆட்சியில், ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கே நிதியமைச்சராக இருக்கும் நிலையிலும், ஒரு சார்பு மக்களுக்காக மட்டுமே திட்டங்களை செயல்படுத்தி வந்தவர் நிர்மலா சீதாராமன்.

இவரது தலைமையில், தனிப்பட்ட நபரின் வரி விகிதம், தனியார் குழுமத்தின் வரி விகிதத்தை விட அதிகரித்தது.

ஏழைகள், பணவீக்கத்தால், அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கே அவதிபட்டு வரும் நிலையில்,

1% இந்தியர்களின் சொத்துமதிப்பு மட்டும் நேர்கோட்டில் வளர்ந்து வந்தது. இந்தியாவில் வறுமை அதிகரிக்கிறது எனும் காலத்தில் தான், ஆசியாவின் பணக்காரர்களும் இந்தியாவில் உருவாகத் தொடங்கினர்.

இதனால் உழைக்கும் மக்கள், “வெங்காயம் வாங்க கூட அவதியுறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என தெரிவித்ததற்கு, எங்களுக்கு (உயர்வகுப்பினராக அடையாளப்படுபவர்கள்) வெங்காயம் உண்ணும் பழக்கமில்லை என கேலி செய்தவர் நிர்மலா சீதாராமன்.

ஆனால், அவரே இம்முறையும் NDA கூட்டணி அமைச்சரவையில் நிதியமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

நிதியமைச்சருக்கு அடுத்தப்படியாக விமர்சிக்கப்படுபவர், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்.

ஒரு ஆட்சியின் கீழ், கல்வி முறை எவ்வாறு சீர்கெடும் என்பதற்கு, இவரது தலைமையும் ஒரு எடுத்துக்காட்டு.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும், NCERT பாடநூல் கழகத்தில், ஆர்.எஸ்.எஸ் காரர்களை அதிகளவில், ஈடுபடுத்தி, காவி அரசியலை பள்ளி குழந்தைகள் மனதில் ஆழப்பதித்தது தான் இவரது வெற்று சாதனை.

அதனையடுத்து, நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் நீட் தேர்வு முறைகேடுகளில், இந்தியத் தேர்வு முகமை மீது தவறில்லை என வக்காலத்து வாங்கியதும் இவருக்கு தனிப்பெருமை சேர்த்திருக்கிறது.

இவ்வாறான இவரின் பெருமைக்குரிய செயல்களால், தற்போது இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களை தொடர்ந்து, மக்கள் எதிர்ப்பை அதிகளவில் சந்தித்து வரும் மற்றொரு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

இரயில்வே துறை அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில்,

கடந்த 2023 ஆம் சுமார் 18 தொடர்வண்டி விபத்துகள் அரங்கேறியுள்ளன. ஒரே ஆண்டில், இத்தனை விபத்துகள் நடந்தது, இது தான் முதன் முறை. அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இது தான் முதன் முறை.

இத்தகைய வரலாறு கொண்ட ஒரு அமைச்சருக்கு தான், மீண்டும் அதே பொறுப்பு தரப்பட்டுள்ளது.

இதுவரை குறிப்பிட்டவர்களுக்கெல்லாம், மேலானவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இவரது தலைமையில், இந்தியா முழுக்க காவல்துறையின் கொடுங்காவல் தலைவிரித்து ஆடி வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டு தான், உத்தராகண்ட் மாநிலத்தின் அல்துவானி கலவரம், மணிப்பூர் கலவரம், டெல்லி எல்லை ரப்பர் துப்பாக்கிச்சூடு, அசாம் வன்முறை உள்ளிட்ட நிகழ்வுகள். எனினும், அமித்ஷா வசமே, உள்துறை சென்றுள்ளது.

இதனால், சிறுபான்மையினர்களின் குரல்வலையே நசுக்கப்பட்டுள்ள நிலையும் உருவாகியுள்ளது.

இவரையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி பெற்றிருக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் தான் ராஜ்நாத் சிங்.

இவர் தலைமையில் கொண்டு வரப்பட்டது தான், அக்னிபாத் திட்டம். இராணுவ வீரர்களுக்கு வழங்கி வந்த நிரந்த பணி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை பறித்துக்கொண்டதில், இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

அதனால், கூட அவருக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டிருக்கலாம்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், நிதின் கட்கரி வாக்கு சேகரிக்க சென்ற போது, அவரது சொந்த கட்சி மக்களே, சாலைகளின் மோசமான நிலையை எடுத்துக்காட்டி, தருக்கமிட்டனர்.

இவ்வாறு, தன் தொகுதிக்கே, சாலை வசதி செய்து தராத ஒருவருக்கு தான், நாட்டில் உள்ள ஒட்டு மொத்த சாலைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற நிலையில், “இவர்கள் தலைமையில் தான், இந்தியா அடுத்த செயல்படப்போகிறது என்பது தான் அச்சமாக இருக்கிறது” என இணையவாசிகள் பரவலாக தங்களது எண்ணங்களை பகிரத் தொடங்கியுள்ளனர்.

Also Read: நாட்டு சிக்கல்கள் குறித்து மோடிக்கு கவலை உண்டா? : மீண்டும் மக்களை புறக்கணிக்க தொடங்கிய மோடி!