Politics

முடிவை நோக்கி மோடியா? : குறையும் மோடி அலை!

18ஆவது மக்களவை தேர்தல் முடிவுக்கு பின், பல விமர்சனங்களுடன் பிரதமராக பதவியேற்ற மோடி, தனது உலகம் சுற்றும் வேலையை, இத்தாலியில் இருந்து தொடங்கியிருக்கிறார்.

இத்தாலியில் நடைபெற்ற G7 மாநாட்டில், இந்தியா உறுப்பினராக இல்லாத நிலையிலும், பேச வாய்ப்பிருக்காது என தெரிந்த நிலையிலும்,

இந்தியாவில் நீட் குளறுபடி, தீவிரவாத தாக்குதல்கள் என எண்ணற்ற சிக்கல்கள் கூடிக்கொண்டிருக்கிறது என அறிந்த நிலையிலும், கவலையற்று உலக அரங்கில் இந்தியாவின் முகம் ‘நான்’ தான் என காட்டிக்கொள்ள விரைவாக சென்று காட்சியளித்தார் மோடி.

அப்போது அவர், “ஜனநாயக உலகின் வெற்றி தான் மக்களவை தேர்தல் முடிவு” என அப்பட்டமான கூற்றையும் முன்வைத்தார்.

கூட்டணி கட்சி இல்லையேல் ஆட்சியே இல்லை என்ற நிலையில் பதவியேற்ற மோடி, தான் பெற்ற வெற்றி போல இதை கூறியிருப்பது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தியது, மோடியின் தனிப்பட்ட, அரசியல் மற்றும் அறம் சார்ந்த தோல்வியை தான் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதனை தவிர்த்து, உலக அரங்கில் போலித்தனத்தை பரப்ப வேண்டாம்” என கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து, உலக அரங்கில் தானும் ஒரு ஆள் என காட்டிக்கொண்டு, இந்தியா திரும்பிய போது, அங்கும் ஏமாற்றம் மட்டுமே மோடியை வரவேற்க காத்திருந்தது.

இதுவரை எப்போது எங்கு சென்று திரும்பினாலும், வரவேற்க கூடும் பா.ஜ.க. பட்டாளம், 2024 தேர்தலுக்கு பின் காணாமல் போனது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே, “மறையும் சூரியனை (மோடி) வரவேற்க யாருமில்லை. ஏன், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் வழக்கமான பூங்கொத்தும் இல்லை” என கேலி செய்தார்.

இதனால், 2024 தேர்தல் பிரச்சாரங்களில், பா.ஜ.க.வின் முன்மொழிவாக இருந்த மோடி அலை, தற்போது காணாமல் போய்விட்டதே என்ற எண்ணம் பரவலாக, இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.

Also Read: NCERT பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்... வரலாறை மறைக்க பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு !