Politics

"இந்தியாவை வழிநடத்தும் ஆற்றல் மிக்கவர் அண்ணன் மு.க.ஸ்டாலின்" - திருமாவளவன் எம்.பி புகழாரம் !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி களம் கண்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 40-ஐயும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. இந்த மாபெரும் வெற்றிக்கு முதலமைச்சரின் வியூகம் மட்டுமின்றி கட்சி தொண்டர்களின் விவேகம், கூட்டணி கட்சிகளின் உத்வேகம் என அனைவரும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் தற்போது 40 நமதாகிவிட்டது. விரைவில் நாடும் நமதாகும் என்று அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தமிழ்நாடு கண்ட இந்த வரலாற்று வெற்றிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் இது மக்கள் திராவிட மாடல் அரசுக்கு கொடுத்த முறையான அங்கீகாரம் என்று பலரும் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த சூழலில் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இதற்கு காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடும் விதமாகவும் கோவையின் கொடிசியா மைதானத்தில் தி.மு.கழகம் சார்பில் இன்று (ஜூன் 15) முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் கழக தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், கழக அரசின் இந்த வெற்றிக் குறித்தும் விசிக தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் பேசியதாவது, “தளபதி மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஒரு பாராட்டு விழா மட்டும் போதாது. அகில இந்திய அளவில் தலைவர்களை அழைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

இந்தியாவை வழிநடத்தும் ஆற்றல் மிக்கவர்தான் அண்ணன் மு.க.ஸ்டாலின். எந்த மாநிலத்திலும் நூற்றுக்குநூறு வெற்றி இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உக்தியைக் கண்டு, இந்தியா கூட்டணி தலைவர்களே வியந்து பார்க்கிறார்கள். 2019-க்கு முன்னரே காவிரி நீர் பிரச்சனையையொட்டி, மு.க.ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணியே இன்றும் தொடர்கிறது. தேர்தலுக்காக உருவாகும் அதிமுக - பாஜக கூட்டணி போல் இல்லாமல், மக்கள் நலன் அடிப்படையில் உருவானது தான் இந்த மாபெரும் கூட்டணி. இவ்வளவுக்கட்சிகளின் பலத்தையும் ஒன்றுப்படுத்தி, கட்டிக்காத்ததுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் Strategy!.

2019 நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி, 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி, அதன் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி, இப்போது நடந்து முடிந்திருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் 100க்கு 100 வெற்றி. தமிழ்நாட்டு வரலாற்றில், இந்திய வரலாற்றில் இப்படி தொடர் வெற்றியை பெற்ற ஒரு கட்சி, ஒரு தலைமை வேறு இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரை இந்தியா கூட்டணியின் அணிக்கு கொண்டுவரும் பெரும் வேலையை முன்னெடுத்தவர் அண்ணன் மு.க.ஸ்டாலின். அகில இந்திய அளவில் ‘இந்தியா’ என்ற கூட்டணி உருவாக்குவதற்கு தளபதி பங்களிப்பு என்பது மகத்தானது. அதனை இந்தியா கூட்டணி தலைவர்களே அங்கீகரித்திருக்கிறார்கள். இந்தியா என்ற பெயரை சூட்டும் போது முதலில் வழிமொழிந்து பேசியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

தி.மு.க வலிமைபெற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கி, ரிஸ்க்கான தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம் என கூட்டணி கட்சிகளையும் தனது கட்சியாக எண்ணி வெற்றி பெற வைத்த பெருமை அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. இது தான், அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்!" என்றார்.

Also Read: சட்டமேலவை தேர்தல் : தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்த பாஜக, சிவசேனா (ஷிண்டே) - உடையும் கூட்டணி !