Politics

சட்டமேலவை தேர்தல் : தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்த பாஜக, சிவசேனா (ஷிண்டே) - உடையும் கூட்டணி !

மகாராஷ்டிராவில் சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

இதனிடையே தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியா கூட்டணி 30 தொகுதியிலும், பாஜக கூட்டணி 17 தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற்றது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பில் சிவசேனாவுக்கு ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதே நேரம் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரே அணியாக இந்த தேர்தலை சந்திக்கவுள்ளன.

மும்பை பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர் தொகுதி, நாசிக் ஆசிரியர் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதிக்கு இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக மற்றும் ஷிண்டே பிரிவு சிவசேனா ஆகிய கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் அங்கு பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.