Politics

நீட் குளறுபடி - கல்வி அமைச்சரின் திமிர்த்தனமான பதில் : பிரியங்கா காந்தி ஆவேசம்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்தது முதல் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மேலும் நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் நடந்து வருகிறது.

அதேபோல் நீட் தேர்வு தொடங்கியது முதலே ஆள்மாறாட்டம், வினாத்தாள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் கூட குளறுபடிகள் நடந்துள்ளது.

குறிப்பாக 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதும் நீட் குளறுபடிகளை உறுதிபடுத்தியுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வெளியாள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்தனர். பின்னர் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கும் மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதால்தான் மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், ”மாணவர்களின் கனவுகளை தகர்க்க தொடங்கியுள்ளது பா.ஜ.கவின் புதிய அரசு. கல்வி அமைச்சரின் திமிர்த்தனமான பதில் 24 லட்சம் மாணவர்களின் குரலை முற்றிலுமாக புறக்கணிக்கிறது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளை அலட்சியப்படுத்தாமல், புகார்களை தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?. பா.ஜ.க அரசு தனது ஈகோவை கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து தீவிரமாக சிந்தித்து தேர்வுகளில் நடைபெறும் ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: நுழைவுத் தேர்வு சிக்கல் அல்ல! : மாற்று கல்வி பெற்றவர்களிடம், ஒரு குறிப்பிட்ட முறையை திணிப்பதுவே சிக்கல்!