Politics

இந்தி பேசும் மாநிலங்களிலேயே பாஜக தோல்வி : "இந்தியாவிற்கே வழிகாட்டிய தமிழ்நாடு" - கி. வீரமணி !

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் திராவிடர் கழகத்தின் சார்பில் 2024 தேர்தல் முடிவுகள் குறித்து சிறப்பு கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஜனநாயகத்திற்கு வர இருக்கும் ஆபத்திலிருந்து வெளியே வந்திருக்கிறோம் என்பது இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்திய மிகப்பெரிய விஷயமாகும்.ஆர் எஸ் எஸ் அமைப்பு தான் மோடியை கடந்த 10 ஆண்டுகளில் இயக்கி இருக்கிறது. 2014 மோடி ஆட்சிக்கு வரும்போது செளகிதார் சாதாரண தொண்டன் என தெரிவித்தார். அவருக்கே தெரியாமல் 2024-ல் அவர் அவதாரமாக மாறிவிட்டார்.

வேலையில்லா திண்டாட்டம் , சரியான திட்டங்களை வகுக்காமல் இளைஞர்களை கொண்டாட வைத்தது தான் மோடியின் ஆட்சி.மோடியின் நாற்காலிக்கு நான்கு கால்கள். ஆனால் அதில் இரண்டு கால்கள் தான் இருக்கிறது, இரண்டு கால்கள் இறவல் கால்கள். அதாவது கூட்டணி கால்களில் தான் நின்று கொண்டிருக்கிறது.

400 இடங்கள் வரும் என பாஜக சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இப்பொழுது காங்கிரஸ் நாங்கள் 100 என வந்துவிட்டார்கள்.இந்த தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பில் வெற்றி பெற்றவர் வருத்தமாக இருக்கிறார் தோல்வி அடைந்தவர் மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஏனெனில் தோல்வி அடைந்தவர் தத்துவ ரீதியாக வெற்றி பெற்று, எண்ணிக்கையில் தோல்வியுற்றிருக்கிறோம் என நினைக்கிறார்.

கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் ஜனநாயகம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை இருந்தது. தேர்தல் முடிவுகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜனநாயகம் மாற்றப்பட்டு பொது சிகிச்சை பிரிவிற்கு வந்துவிட்டது. ஆனால் பொது சிகிச்சை பிரிவிலேயே இருக்காது. வெளியே வந்து எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம்.இந்திய கூட்டணி அதிக அளவுக்கு இந்த முறை வரவில்லை என்றாலும் அடுத்த முறை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளம் வந்த பொழுது தூத்துக்குடிக்கு வந்து பார்க்காத பிரதமர் எல்லா ஊர்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ராமரை குளிப்பாட்டினார். ஆனால் அயோத்தியில் பாஜக தோல்வியடைந்துவிட்டது.அயோத்தியை சுற்றியுள்ள 5-6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடியையே ராமர் கைவிட்டார்.

2024 தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்று இருக்கிறது, இந்துத்துவா கருத்துக்கள் ஹிந்தி பேசும் மக்கள் வாழும் இடங்களில் தோற்றுவிட்டது என நேற்று வெளியான ஆங்கில நாளிதழ் தலையங்கம் தெரிவித்துள்ளது.ஹிந்தி அதிகம் பேசும் மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றிருக்கிறது. இதன் மூலம் மக்கள் ஏமாற மாட்டார்கள் என தெளிவுபடுத்துகிறது.

தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடியது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மறைவிற்குப் பிறகு இது வெற்றிடம் என பலர் சொன்னார்கள்.ஒருபோதும் தமிழகம் வெற்றிடமாகாது இது கற்றிடம் ( கற்றுக்கொள்ளக்கூடிய இடம்).தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதி வெற்றி பெற்றது தமிழக முதலமைச்சருக்கு தான் பெருமை. கூட்டணிக் கட்சியினர் மற்றும் தமிழக மக்களுக்குத்தான் பெருமை. தமிழகத்தில் இருப்பது கொள்கை கூட்டணி. அதனால் தான் நீடிக்கிறது. எனவே நாட்டில் சமூகநீதி காப்போம்.இஸ்லாமிய பிரதிநிதித்துவம் இல்லாமல் அமைச்சரவை இருக்கிறது என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது"என்று கூறினார்.

Also Read: இதெல்லாம் பூஜ்யங்களுக்கு ஒன்றுமே புரியாது : அ.தி.மு.க , பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய முரசொலி!