Politics

தரம் தாழ்ந்த விமர்சனங்களை விட்டுவிட்டு நாட்டின் மீது அக்கறை காட்டுங்கள்- மோடியை மறைமுகமாக விமர்சித்த RSS!

கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக தலைமைக்கும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் மோதல் போக்கு இருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக மோடிக்கு பதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரியை முன்னிலை படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனிடையே பாஜக மைனாரிட்டியாக மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்கவுள்ள நிலையில், மோடிக்கு பதில் வேறு ஒருவரை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் முயல்வதாகவும் கூறப்பட்டது. இது குறித்து பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமாக முன்மொழியப்பட்டார். இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியில் இருப்பதற்காக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பிரதமர் மோடியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அங்கு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவந்து, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சிகளை எதிரியாகப் பார்க்கக்கூடாது. அவர்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மணிப்பூர் கடந்த 10 வருடமாக அமைதியாக இருந்தது. ஆனால் திடீரென உருவாக்கப்பட்ட வன்முறையால் அது தற்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை பரிசீலனை செய்வது நம் கடமை. தேர்தலின் போது ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தனர், அவை சமூகத்தில் பிளவை அதிகரிக்க செய்யும் வகையில் இருந்தது. இனி அதை விட்டு நாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும்"என்று கூறியுள்ளார்.

Also Read: மக்களவையில் 102- ஆக உயர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை... தொடரும் சுயேச்சைகளின் ஆதரவு !