Politics

NDA கூட்டணிக்குள் அதிருப்தி : மறைமுகமாக கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கிறதா பா.ஜ.க?

கடந்த இரு மக்களவை தேர்தல் முடிவுகள், பா.ஜ.க ஆட்சி அமைக்க வித்திட்ட நிலையில், தற்போதைய 2024 மக்களவை தேர்தல் முடிவு, NDA கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டுள்ளது.

இதனால், கேபினட் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பா.ஜ.க.வின் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டணியின்றி ஆட்சியே கவிழும் என்பதால், மொத்தமுள்ள 30 அமைச்சகங்களில் ஓரளவு விழுக்காட்டை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது கட்டாயமானது.

ஆகவே, மோடி - பிரதமராக பதவியேற்றும், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்க 24 மணிநேரத்திற்கும் மேலான நேரம் எடுத்துக்கொண்டது பா.ஜ.க.

எனினும், 24 மணிநேரங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட அமைச்சரவையிலும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், இரண்டாம் நிலை துறைகளாகவே அமையப்பெற்றுள்ளன.

அதிலும், மொத்தமுள்ள 30 கேபினட் அமைச்சரவையில், 5 துறைகளே, கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், NDA கூட்டணிக்குள் கடும் அதிருப்தி மற்றும் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் நீண்டகால கூட்டணி கட்சியாக இருக்கும் சிவசேனா (ஷிண்டே), “தாங்கள் 7 எம்.பி.க்களை கொண்டுள்ளபோதும், எங்களுக்கு கேபினட்டில் பொறுப்பு ஒதுக்காமல், இரண்டு, ஒரு எம்.பி கொண்ட கட்சிகளுக்கு கேபினட்டில் இடம் ஒதுக்குவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்” என கேள்வி எழுப்பியுள்ளது.

இவர்களுக்கு முன்னதாக, மகாராஷ்டிர NDA கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தங்களுக்கு கேபினட்டில் இடம் ஒதுக்காததற்கு, தங்களது அதிருப்தியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், தங்களுக்கு சபாநாயகர் பொறுப்பு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி.

இது குறித்து, மோடியிடமிருந்தும், மோடி சார்ந்துள்ள பா.ஜ.க.விடமிருந்தும் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், சபாநாயகர் குறித்த தகவல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: புதிய திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!