Politics

பிரதமர் கிசான் நிதி வழங்கல் ஆணையில் கையெழுத்திட்ட மோடி : வேளாண் அமைச்சரையே தோற்கடித்ததால், புது பாசமா?

கடந்த 2019ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான அரசு, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த போது கொண்டு வரப்பட்டது தான், பிரதமர் கிசான் நிதி (சிறு, குறு விவசாயிகளுக்காக வழங்கப்படும் நிதி).

இந்நிதி வழங்கல் முறை மூலம், 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வழங்கப்படுவது வழக்கம். அதாவது, ஆண்டிற்கு ரூ. 6,000.

இந்நிதியால் பயன் என்பது, எள் அளவே. காரணம், 2024ஆம் ஆண்டு கடந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில், அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைவாசி உச்சம் தொட்டுள்ள சூழலில், தனிநபரின் ஒரு நாள் தேவைக்கு ரூ. 50 என்று வைத்துக்கொண்டால் கூட, குடும்பத்திற்கு 4 பேர் வீதத்தில், ரூ. 200 தேவைப்படும். அதாவது, மாதத்திற்கு ரூ. 6,000.

ஆனால், அதில் பாதி இல்லை. 12-இல் ஒரு பங்கு என்று, மாதம் ரூ. 500 வழங்கும் திட்டம் தான், இந்த பிரதமர் கிசான் நிதி திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம், உண்மையில் சிறிது பயனேனும் உள்ளதா? என்றால் அதுவும் கேள்விக்குறியே.

காரணம், ஏழைகளாக இருக்கும் அனைத்து விவசாயிகளும், இத்திட்டத்திற்கு தகுதிபெற்றவர்கள் இல்லை.

நிலம் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே, இத்திட்டத்திற்கு தகுதிபெற்றவர்களாக இருக்கின்றனர்.

இதனால், வாடகை நிலத்தில் உழவு செய்பவர்களுக்கும், அன்றாட கூலிக்கு வேலை செய்யும் விவசாயிகளுக்கும் எள் அளவும், இத்திட்டத்தின் வழி பயனில்லை.

எனினும், பொதுவாக விவாசாயிகளுக்கான நிதி என பெயரிட்டு, ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது, விவசாயிகள் கொண்டுள்ள வெறுப்பை போக்க, விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பது போன்று நிதி வழங்கும் காட்சிப்படுத்துதல் தான், இத்திட்டம்.

இச்சூழலை எதிர்த்து தான், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், குறைந்த ஆதரவு விலையை முக்கிய கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

ஆனால், அதனை பொருட்படுத்த, பா.ஜ.க.விற்கு நேரமற்று, அதற்கு மாறாக, ரப்பர் குண்டுகளை வீசவும், விவசாயிகளை சிறையில் அடைக்கவுமே நேரம் ஒதுக்கி வருகிறது.

இதன் காரணமாகவே, விவசாயிகள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தில், பா.ஜ.க ஒரு இடம் கூட பெறாமல் மிகப்பெரிய அடியை சந்தித்துள்ளது.

எனவே, தான் தற்போது விவசாயிகள் குறித்து எண்ணிக்கொண்டிருக்கிறவர் போல, தனது முதல் கையெழுத்தை, பிரதமர் கிசான் நிதிக்கான கையெழுத்தாக பதிவிட்டுள்ளார் மோடி.

ஆனால், அதுவும் வீண் திட்டத்திற்கு என்பதே விமர்சிக்கக்கூடியதாய் அமைந்துள்ளது.

Also Read: பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை - தமிழ்நாடு அரசு பெருமிதம்!