Politics

புதிய NDA கூட்டணி அரசு இன்று பதவியேற்பு... மோடி அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் ?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .

இந்த சூழலில் தற்போது கூட்டணி ஆட்சிகளின் உறுதுணையோடு மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். இன்று (ஜூன் 9) மாலை டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச நாடுகளில் இருந்தும் பல்வேறு பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அதே வேளையில் நாட்டிலுள்ள பல கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மோடி மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருடன் சேர்ந்து இன்று 30 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். அதில் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ஜெ.பி. நட்டா, HD குமாரசாமி உள்ளிட்டோர் அடங்குவர்.

அதே போல் 36 இணையமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். அதில் எல்.முருகன், சுரேஷ் கோபி, சோப கரந்தலாஜே அடங்குவர். அதுபோக 6 இணையமைச்சர்களுக்கு தனி பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. NDA அரசில் மோடி உள்பட மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர்.

இதில் மொத்தமுள்ள 30 கேபினட் அமைச்சர்களில் 5 பேர் மட்டுமே பாஜக தனது கூட்டணிக்கு கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 அமைச்சர்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். இன்று பதவியேற்பு முடிந்த பிறகு, விரைவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.