Politics

“இந்த தேர்தலில் பாஜகவின் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது...” - செல்வப்பெருந்தகை அறிக்கை !

இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலாகும். இத்தேர்தல் முடிவின் மூலம், சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டு, ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலாகும். இத்தேர்தல் முடிவின் மூலம், சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டு, ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த ஜனநாயக விரோதச் செயல்களை இனி நிகழ்த்த முடியாது. இந்த தேர்தல் முடிவின் மூலம் தலைவர் ராகுல்காந்தி கூறியதைப் போல, அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட இருந்த பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை வெற்றியாக காங்கிரஸ் கட்சி கருதி, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 303 இடங்களை விட தற்போது 63 இடங்கள் குறைவாக பெற்றதனால் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலையில் பா.ஜ.க. இருக்கிறது. மதரீதியாக பிளவுபடுத்துகிற மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாற்பதும் நமதே என்று கூறியபடி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் சாதனை படைத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 221 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளை விட இந்தியா கூட்டணி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. 32 மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட 192 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது.

நம்மை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. 7 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணியோடு சேர்த்து 20 இடங்களிலும் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக நரேந்திர மோடி பேசியிருப்பது மிகச் சிறந்த நகைச்சுவையாகும். இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்குக் காரணம் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் வளர்த்தெடுத்த அரசியல் மண்ணாக தமிழ்நாடு இருப்பது தான்.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற வகையிலும், எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை எப்படி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஜூன் 11 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு எனது தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத் தான் மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது கடந்த கால வரலாறாகும். இதை அரைவேக்காடு அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பா.ஜ.க. கடந்த மக்களவை தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பெற்றிருப்பதும் அறுதி பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக பெற்றிருக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை 23 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒப்பிட்டு பேசுவது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகும்.

தமிழக அரசியலில் திடீரென நுழைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, அதில் தோல்வியடைந்து உடனடியாக பா.ஜ.க. தலைவராக பதவி உயர்வு பெற்ற அதிசயத்தை நிகழ்த்தி தலைவராக வந்த அண்ணாமலை, அரசியல் வரலாறு தெரியாமல் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைத்தவர் தலைவர் ராகுல்காந்தி. ஏற்கனவே இருமுறை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நடத்தி, மக்களை நேரடியாக சந்தித்து, ஆதரவை திரட்டி அதன்மூலம் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக 26 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைந்திட ஒரு சூழலை உருவாக்கிய பெருமை தலைவர் ராகுல்காந்திக்கு உண்டு. அவர் இரு மக்களவை தொகுதியிலும் அமோக வெற்றி பெற்றதன் மூலம் மக்களின் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

கடந்த காலங்களில் நரேந்திர மோடியின் ஜனநாயக விரோத அரசியலை எப்படி எதிர்த்து குரல் கொடுத்து போராடினாரோ அதேபோல, இன்றைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் தவறுகளை மக்களின் பிரதிநிதியாக எடுத்துரைப்பதில் மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என்று நாடே எதிர்பார்க்கிறது. அவரது கடுமையான உழைப்பையும், தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரின் பரப்புரையையும் தமிழ்நாடு காங்கிரஸ் பாராட்டுகிறது, போற்றுகிறது.

எனவே, தமிழக அரசியலில் வலிமைமிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு, எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11 ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை தந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கபூர்வமான கருத்துகளை கூறுவதற்கு தவறாமல் வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன்."

Also Read: "இஸ்லாமிய இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும்"- தெலுங்கு தேசம் கட்சி உறுதி... அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள் !