Politics

பாஜக MP கங்கனா ரனாவத் தாக்கப்பட்ட விவகாரம் : பெண் CISF காவலருக்கு குவியும் ஆதரவு - காரணம் என்ன?

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி முன்னேற்றம் என பல வாக்குறுதிகளை கொடுத்து, அதனை 'ஜூம்லா'-வாக செய்து வருகிறது பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக பல திட்டங்களை அறிவித்தது.

குறிப்பாக பாஜக அரசு கொண்டு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். எனினும் அதனை கண்டுகொள்ளாத பாஜக அரசு, அவர்கள் மீது வன்முறையை ஏவியது. விவசாயிகளுக்கு முறையான விளைப் பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

விவசாயிகள் தற்கொலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கடனை தள்ளுபடி செய்யாமல், பெரிய தொழிலதிபர்களின் கோடி கணக்கிலான கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. அண்மையில் கூட குறைந்தபட்ச ஆதார விலையை கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தும் வந்தனர். அந்த வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை அடிக்கடி முன்வைக்கும் நடிகையும், தற்போது பாஜக எம்.பியாக இருக்கும் கங்கனா ரனாவத் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கடுமையாக பேசியிருந்தார்.

அதோடு விவசாயிகள் ரூ.100, ரூ.200 என்று பணம் வாங்கிக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தார். கங்கனாவின் கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. எனினும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சித்தே வந்தார் கங்கனா. இந்த சூழலில் தற்போது அவரை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் ஒருவர் சட்டென்று கன்னத்தில் அறைந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி செல்வதற்காக சுமார் பகல் 3 மணியளவில் சண்டிகர் விமான நிலையம் வந்துள்ளார். அப்போது சோதனையின்போது பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையை (CISF) சேர்ந்த காவலர் குல்விந்தர் கவுர் என்ற பெண் ஒருவர், கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். மேலும் தான் தாக்கியதற்கு கங்கனா விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியது என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட தனது தாயை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதற்காக அந்த பெண் காவலர் பாஜக எம்.பி கங்கனாவை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெண் காவலருக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. பலரும் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றாலும், அந்த தாக்குதல் சரியான காரணத்துக்காக அமைந்துள்ளதாக பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. இந்த சூழலில் இதற்கு CISF அதிகாரிக்கு ஆதரவு குவிந்து வருவதோடு, தான் வேலை தருவதாக பிரபல பாடகர் ஒருவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர், "அரசியல்வாதிகளுக்கு எதிராக பல வழிகளில் தங்கள் கோபத்தை பொதுமக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்தின் போது பெண் விவசாயிகளை கங்கனா ரனாவத் அவமதித்துள்ளார்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தொழிலதிபரான ஷிவ்ராஜ் சிங், CISF பெண் காவலருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருவதோடு, ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசையும் அறிவித்திருக்கிறார்.

விஷால் தத்லானி

மேலும் பாடகர் விஷால் தத்லானி, "வன்முறையை நான் ஆதரித்ததில்லை. ஆனால் CISF பெண் கான்ஸ்டபிளின் கோபத்தை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்கு நிச்சயம் நான் வேலை தருவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “பாதுகாப்பு சோதனையின் போது யாரையாவது அறைந்தால் அதை நாங்கள் ஆதரிப்பதில்லை. இது நடக்கக்கூடாது. ஆனால் நாட்டின் சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியவர்களை பயங்கரவாதி என்று கங்கனா ரனாவத் கூறியது ஏற்கத்தக்கதல்ல. அவர் கருத்துக்கு நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பெரும் ஆதரவாளரான நடிகை கங்கனா, பாஜகவில் இணைவதற்கு முன்பே பாஜகவுக்கும் மோடிக்கும் ஆதரவான பலவித கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருவார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பாஜகவில் இணைந்து, மத்திய பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு பாஜக எம்.பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேர்தல் 2024: கடவுளையே கைவிட்ட கடவுள் - ராமர் தொடர்பான முக்கிய தொகுதிகளில் மண்ணை கவ்விய பாஜக - பட்டியல் !