Politics

ஆட்சியை தக்கவைத்தாலும், அடி பெரியது! : பா.ஜ.க இழந்த 19 ஒன்றிய அமைச்சர்கள்!

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், 2014- 2019க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை விட,

2019 - 2024க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் அதிகம்.

நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூட்டிய பல்வேறு சட்ட திருத்தங்கள் அனைத்தும், 2019 - 2024க்கு இடைப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்டதே.

அவ்விடைப்பட்ட காலத்தில் ராமனும் நான் தான், ராவணனும் நான் தான் என்ற மிதப்பலில் இருந்தவர் மோடி. அதற்கு பக்கபலமாய் இருந்தவர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள்.

ஆனால், அவ்வாறு பக்கபலமாய் இருந்தவர்களில், ஏறக்குறைய பாதியை பறிகொடுத்திருக்கிறது பா.ஜ.க.

பறிகொடுத்ததற்கு முக்கிய காரணம், 2024 மக்களவை தேர்தலில் கண்ட படுதோல்வி, மற்றொரு காரணம் தோல்வி பயம்.

இந்த தோல்வி பயம், பா.ஜ.க கட்சி தனது மக்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது முதலே தென்பட தொடங்கியது.

குறிப்பாக, பா.ஜ.க.வால் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது, பலர் மீது அபரிவிதமான எதிர்ப்புகள் எழுந்ததால், தோல்வி பயத்தில், தாம் போட்டியிட விரும்பவில்லை என பா.ஜ.க வேட்பாளர்கள் பின் வாங்கினர். அதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர்.

நாட்டின் உழைக்கும் சமூகத்தினரை, பொருளியல் அளவில் இழிவுபடுத்தி வந்த நிதியமைச்சரே, தேர்தலில் போட்டியிட நிதி இல்லை என்ற சாக்கு போக்கு சொன்னதும், இந்த தேர்தலில் அரங்கேறியது.

அதனையடுத்து, நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை எளிதாக வென்றுவிடுவேன் என்ற ஆணவப்பேச்சு பேசிவந்த, ஸ்மிருதி இரானியும் இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.

ராஜீவ் சந்திரசேகர், ஆர்.கே. சிங் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட 19 அமைச்சர்களும் தோல்வியை பகிர்ந்துகொண்டனர். ஏன் மோடியே, முதல் 4 சுற்று வாக்கு எண்ணிக்கை வரை, பின்னடைவில் தான் இருந்தார்.

ஆகையால், தற்போது தலையிலிருந்தும், உடல் இல்லாத உருவமாய் உருவெடுத்திருக்கிறது பா.ஜ.க.

இதனால், ஆட்சியமைக்க இருக்கும் பா.ஜ.க கூட்டணியில், பா.ஜ.க.வினரை கடந்து, கூட்டணி கட்சிகளும், ஒன்றிய அமைச்சரவையில் பெரும் பங்குவகிப்பர் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் வழி, மோடி பிம்பத்திற்கு மட்டுமல்ல, பா.ஜ.க பிம்பத்திற்கும் பெரிய அடி விழுந்துள்ளது.

Also Read: ”நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!