Politics

மோடி அரசு இனி NDA அரசு! : அதிகாரத்தின் முதுகெலும்பை முறித்த இந்தியா கூட்டணி!

ஆட்சியை பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில், பெரும்பான்மை பெற்று 2014இல் ஆட்சியை பிடித்த பா.ஜ.க,

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டும் அல்லது மாற்றிக்கொள்ளும்படி நடித்துக்கொண்டும் வருகிறது.

அவ்வகையில், 2014ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க ஒரு நடிப்பும், 2019ல் ஒரு நடிப்பும், 2024-ல் ஒரு நடிப்பும் அரங்கேறி, மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

ஆனால், பா.ஜ.க 2014, 2019 தேர்தல்களில் அரங்கேற்றிய நடிப்பின் மூலம் பெற்ற ஆதரவை, 2024-ல் பெறவில்லை.

அதற்கு, சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடியதும், சிறுபான்மையினர் உரிமை பறிப்புகள் அளவுகடந்து அமல்படுத்தப்பட்டதும், ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையையும், ஒரே தலைவர் முறையையும் அமல்படுத்த திட்டமிட்டதும் தான் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

இதனால், 2024 தேர்தல் பிரச்சாரங்களில், பா.ஜ.க.வினரால் முன்னெடுக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC), அரசியலமைப்பில் திருத்தம் என்ற பெயரில் அரசியலமைப்பையே அழிப்பது, இஸ்லாமியர்களை வந்தேரிகளாக்கியது ஆகிய வேற்றுமை பேச்சுகள் எல்லாம்,

தற்போது, தேர்தல் முடிவுக்கு பின் முற்றிலுமாக மாற்றம் கண்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு நாள் அன்று, மதிப்பளிக்கப்படாத இந்திய அரசியலமைப்பு, எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தற்போது மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அதுவும், குறிப்பாக அரசியலமைப்பை மாற்றுவேன் என உறுதிபூண்டவர் கையாலேயே மதிப்பளிக்க வைத்தது தான் இந்தியா கூட்டணியின் சிறப்பும் கூட.

இதனால், சற்று வயிறு எரிச்சலுக்கு ஆளாகியுள்ள மோடி, குறிப்பிடத்தக்க வெற்றி பெறாவிடினும், எதிர்க்கட்சிகள் ஏன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என புரியவில்லை என்று NDA கூட்டணி கூட்டத்தில் பேசியுள்ளார்.

கொண்டாட்டத்திற்கு காரணம், பா.ஜ.க - தனது ஒற்றைப் பெரும்பான்மையை இழந்ததன் வழி, கூட்டணி தத்துவத்திற்கு தலை பணிந்துள்ளதும், இதனால், சீர்கேடுகள் பல அரங்கேறினால், ஆட்சி கவிழும் என்ற அச்சம் உண்டாகும் என்பதும் தான்.

இந்த காரணத்தால், பா.ஜ.க கூட்டணி என்ற அடையாளப்படுத்தமும், தற்போது NDA கூட்டணி என்று அடையாளப்படும் அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது.

தற்போதைய இந்திய அரசியலில், மோடியை விட, முக்கியமானவர்களாக NDA கூட்டணியில் இருக்கும், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

இவை தான், இந்தியா கூட்டணியின் வெற்றியும் கூட. இதனை மோடி புரிந்துக்கொண்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாததால், சோகத்துடன் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறார் மோடி.

Also Read: மாற்ற நினைத்த அரசியல் சாசனம் : மோடியை வணங்க வைத்த இந்தியா கூட்டணி!