Politics

தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடாமல் விரட்டியடித்த திராவிட நாயகர் : The Wire இணையதள ஏடு புகழாரம்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வாகைசூடியுள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்ற விடாமல் விரட்டியடித்தது.

இந்நிலையில், இதுகுறித்து தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரையில்,பாஜகவின் மதவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் உறுதியாக திமுக எதிர்த்ததே தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமல் போக காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைத்த ஒருமித்த கொள்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான கூட்டணியும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை விடாமுயற்சியுடன் உருவாக்கி, அதனை பராமரித்து வருதாகவும், அதுவே, பின்னர் இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்றும் தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.கவின் கொள்கைகளை திமுக கடுமையாக எதிர்த்ததுடன், அவர்களை எதேச்சாதிகாரம் மற்றும் மதவாத சித்தாந்தத்தின் ஆதரவாளர்கள் என்று முன்னிறுத்தியதும், கூட்டணிக்கு தெளிவான, ஒருங்கிணைந்த நோக்கத்தை வழங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைப்பாடு வெறும் எதிர்ப்பாக மட்டும் இல்லாமல், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மாநில சுயாட்சிக்காக வாதிடும் திராவிட இயக்கத்தின் வரலாற்று மற்றும் கருத்தியல் அடித்தளங்களில் ஆழமாக வேரூன்றியதாகவும் தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.

இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய தி.மு.கவின் ஒவ்வொரு பிரிவையும் பயன்படுத்தி, தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடுகளைத் தெரிவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சித்தாந்த அரசியலின் முத்திரையே, தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலுன்ற முடியாமல் போனதற்கு காரணம் என்றும் தி வயர் இணையதளம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Also Read: ”கலைஞரின் அனுபவங்களை கண்டு வியந்து இருக்கிறேன்” : நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!