Politics

கடந்த காலங்களில் இருந்த கர்வம் - இனி இல்லை! : கூட்டணி இல்லையேல், பா.ஜ.க ஆட்சியே இல்லை!

10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி, 2014ல் முடிவுக்கு வந்து, மோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட போது, பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 282.

அதாவது, தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையான 272ஐ விட அதிகம். அந்த எண்ணிக்கை, கடந்த 2019 மக்களவை தேர்தலில் 303ஆக உயர்ந்தது.

இதனால், தனக்கு தடையே இல்லை. இனி வரும் காலங்களில், ஒற்றைக்கட்சி தான், ஒரு தலைவர் தான் என்ற எண்ண மிதப்பலுக்கு ஆளான பல பா.ஜ.க.வினரில், முதன்மையானவர் மோடி.

தன்னை தடுக்க யாரும் இல்லை. என்னை எதிர்க்க யாரும் இல்லை என்ற முழக்கத்தை மக்களிடம் திணித்தவரும் மோடியே.

அவ்வகையில் தான், மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டால் அதனை நீக்குவதும், கடந்த காலங்களில் மோடியால் முடுக்கிவிடப்பட்ட கலவரங்களுக்கான ஆதாரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டால் அதற்கு தடையிடுவதும்,

தடையிடுவது, தனி மனித உரிமைக்கு எதிரானது என்றால், சட்டத்தையே மாற்றுவதுமான நடவடிக்கைகளை மும்முரமாக கொண்டு வந்தது மோடி அரசு.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தான், புதிய குற்றவியல் சட்டங்கள், புதிய தொலைதொடர்பு சட்டம், ஊடக சட்டம் (தகவல் மற்றும் ஒளிபரப்பு), கல்வி திருத்தச்சட்டங்கள், அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் (பழங்குடியினர், சமூக நீதி, அதிகாரம், சட்டம் ஆகியவற்றின் அடிப்படையை மாற்றும் சட்டங்கள்),

டிஜிட்டல் (எண்ம) தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டங்களை நீக்கும் மசோதாக்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், வன திருத்தச் சட்டம், ஒதுக்கீட்டு திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள்.

இவை எல்லாம், கடந்த 2023ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டன. அதுவும், நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டு, மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சட்டங்கள்.

இடையிடையே, மக்களவை உறுப்பினர்கள் பதவி நீக்கம், முதலமைச்சர்கள் கைது வேறு. இவை எவையும், இதுவரை இந்திய ஜனநாயகத்தில் அரங்கேறாத நடைமுறைகள் வேறு.

இதனால், இது போன்ற பாசிச விழுமியங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை எதிர்த்து, தமிழ்நாட்டில் தி.மு.க, மேற்கு வங்கத்தில் திரிணாமுல், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி உள்ளிட்ட மாநில கட்சிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட பேராற்றல் தான், ‘இந்தியா கூட்டணி.’

இப்பேராற்றலை தடுக்க, பாசிச பா.ஜ.க எண்ணற்ற குறுக்கு வழிகளை மேற்கொண்டும், ஏன் இறுதியில் Exit Poll என்கிற உளவியல் விளையாட்டை அரங்கேற்றியும்,

அவை எவற்றிலும் தொய்வில்லாமல், 234 தொகுதிகளில் வென்று காட்டியிருக்கிறது இந்தியா கூட்டணி.

இதனால், கடந்த இரு தேர்தல்களில் கூட்டணி சார்பு இல்லாமல், பா.ஜ.க.வை சார்ந்து மற்ற கட்சிகள் இருந்த நிலை மாறி,

மற்ற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான், இனி பா.ஜ.க இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி தந்திருக்கின்றனர் மக்கள்.

குறிப்பாக தமிழ்நாடு - புதுச்சேரியில், பா.ஜ.க.விற்கும் சரி, பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கும் சரி, பல இடங்களில் டெபாசிட் இழப்பு ஏற்பட்டு, தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களில் வென்று, சாதனை படைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் என்றாலே, பா.ஜ.க. தான் என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம், 2024-ல் தவிடுபுடியாகியுள்ளது.

பா.ஜ.க.வை விட, சமாஜ்வாதி அதிக இடங்களை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், பா.ஜ.க காலூன்றி இருந்த ஃபைசாபாத் (அயோத்தி) தொகுதியிலும் சரி, ராகுல் காந்திக்கு சவால் விட்ட அமேதி தொகுதியிலும் சரி, மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது பா.ஜ.க.

சுமார் 13 ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்களும் தோல்வியில் துவண்டுபோயுள்ளனர். அதில், மகேந்திர நாத் பாண்டே, அர்ஜுன் முண்டா, பக்வந்த் குபா பீடர், முரளிதரண், ஸ்மிருதி இரானி, சஞ்சீவ் பல்யான் ஆகியோர் அடங்குவர்.

இதனால், பா.ஜ.க.வின் பெரும் புள்ளிகள் கவிழ்ந்ததோடு, கூட்டணி கட்சிகளை தொங்கிக்கொண்டிருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

எனவே, மோடியின் ஆட்டம் இனி இருக்காது. ஒருவேளை ஆட்டம் காண்பிக்க எண்ணினாலும், அது விரைவில் சுக்குநூறாகும் என்பதே, 2024-ல், பா.ஜ.க பெற்ற சிறுபான்மை வெற்றி உணர்த்துவதாய் அமைந்திருக்கிறது.

Also Read: மீண்டும் அதே பாதை! : முரணை வளர்த்து ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க!