Politics

”மோடியின் சர்வாதிகாரத்தால் படுகுழிக்குள் சென்ற பா.ஜ.க” : சுப்பிரமணியசாமி தாக்கு!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியாகின. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது.

இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.

இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிகிறது. அந்த இரண்டு முதல்வர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். எனினும் அந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க கூட்டணியில் உள்ளது.

400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூவி வந்த பா.ஜ.கவால் ஆட்சி பிடிப்பதற்காக 272 தொகுதிகளை கூட பெறமுடியவில்லை. இதற்கு காரணம் இந்தியா கூட்டணியின் எழுச்சியே காரணமாகும்.

இந்நிலையில் மோடியின் சர்வாதிகார மனநிலை பா.ஜ.கவை படுகுழிக்குள் தள்ளிவிட்டது என பா.ஜக மூத்த சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார். மேலும் கூறிய அவர் "பா.ஜ.கவுக்கு 220 இடங்களில் தான் வெற்றி கிடைக்கும் என்று நான் கணித்தேன். இந்த கணிப்பு என்பது சரியாகி உள்ளது. பா.ஜ.க 237 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

நான் சொன்ன ஆலோசனைகளை பா.ஜ.க பின்பற்றி இருந்தால் பாஜக 300 தொகுதிகளில் வென்று இருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக மோடியின் சர்வாதிகார மனநிலை பாஜகவை படுகுழிக்குள் தள்ளிவிட்டது. இப்போதாவது அவர் தனது மனநிலையில் இருந்து வெளியேறி வர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Also Read: ”MP சீட்டுகளை கேட்டு தட்டேந்தி நிற்கும் அமித்ஷா” : ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு!