Politics

"திருவள்ளுவரை ஆரியக் காவிக்குள் அடக்க வேண்டும் என நினைக்கும் ஆளுநர்" : உலகத் தமிழர் கழகம் கண்டனம் !

திருவள்ளுவர் திருநாள் விழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு உலகத் தமிழர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருவிழா என்கிற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகையில் நடத்தப் போவதாக ஓர் அழைப்பிதழை மிகவும் கமுக்கமாக இந்திய அரசு ஊழியர்களுக்கும், ஆரியப் பார்ப்பனிய அடிவருடிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது ஆளுநர் மாளிகை.

ஆளுநரின் செயலர் பெயரில் அந்த விழாவும் அழைப்பும் அமைந்திருக்கிறது. ஆர்.என். இரவி, தான் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த 2021 தொடங்கி திருவள்ளுவரை எப்படியாவது ஆரியக் காவிக்குள் அடக்கி விட வேண்டும் என்பதற்காக எண்ணற்ற புளுவுகளையும் புனைவுகளையும் தொடர்ந்து பேசி வருவதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் பரவி இருக்கிற தமிழர்களும் அறிவார்கள். முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனிய வர்ணாசிரமத்திற்கு எதிரான கருத்துடைய திருக்குறளை ஆரிய வயப்படுத்திட ஆளுநர் இரவி தொடர்ந்து செய்து வரும் சூழ்ச்சிச் செயல்பாடுகளை மானமுள்ள தமிழர்கள் அனைவரும் கடுமையாகவே கண்டித்து வந்திருக்கின்றனர்.

ஆனாலும், ஆர் எஸ் எஸ் இன் வேலை திட்டத்தை ஆளுநர் இரவி விடுவதாக இல்லை. அவருடைய தனிப்பட்ட கருத்தாக கருத்தரங்கில் பேசிக் கொள்வதையோ, நூல்கள் எழுதி வெளியிடுவதையோ நாம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டு அரசின் இலச்சினைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு அரசின் அறிவிப்புப் போல் ஆளுநராக இருந்து கொண்டு கருத்தறிவிப்பதும், திருவள்ளுவரைப் பட்டை போட்டுக் காவி உடை அணிவித்து விழா எடுப்பதாக அறிவிப்பதும் கடுமையான கண்டனத்திற்குரியது.

அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக்கும் இது எதிரானது. தமிழ்நாடு அரசு இதைக் கண்டித்தாக வேண்டும் எனக் கீழ்க்காணும் அறிஞர் பெருமக்கள், இயக்கப்பொறுப்பாளர்கள், தலைவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து வலியுறுத்துகிறோம்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: இனி 16 நாட்களில் சான்றிதழ் பெறலாம் : தமிழ்நாடு அரசின் அசத்தல் முடிவு குறித்த விவரம் என்ன ?