Politics

”ஜெய்... ஜெய்... ஜூம்லானந்தா” : பிரதமர் மோடியை வறுத்தெடுத்த சிலந்தி!

இந்தியாவுக்கு ஒரு புதிய ‘அவதாரம்’ கிடைத்துள்ளது. ஆம்; இதுவரை பத்து அவதாரங்களையே கேட்டுப் பழகிப்போன மக்களுக்கு இப்போது பதினொறாவது அவதாரம் ஒன்று அவதரித்துள்ளது. மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், இராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்தைத் தொடர்ந்து இப்போது ஒரு புதிய அவதாரத்தை விஷ்ணு எடுத்துள்ளார்.

‘இது என்ன புதுபுரூடா!’ – எனக் கேட்டிடத் தோன்றும்; இது நாம் விடும் புரூடா அல்ல; இப்படிப்பட்ட புரூடாவை வெளியிட்டவரே பாரதத்தின் இன்றைய பிரதமர், ‘புரூடா புலவர்’ ‘பொய்யின் புரவலர்’ புரட்டுச் சக்கரவர்த்தி, நயவஞ்சகத்தின் நாயகர்– சாட்சாத் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள்தான்!

‘‘நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்’’ என மோடியே, தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள அதுபேச்சுப் பொருளாகிவிட்டது! மோடியின் சமீபகால பிதற்றல்களில் உச்சகட்டம் இது! நமது வலது சாரி மாமாக்கள் ஊடகங்களில் உட்கார்ந்துகொண்டு, இந்த அவதாரத்துக்கு காரணகாரியங்கள் கற்பித்து புதிய பஜனை பாடிடக் கூடும்! ஆம்; எல்லாவற்றையும் கேட்டுத் தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை நாட்டிலே உருவாகிவிட்டது!

அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டவே திருமால் அவதாரம் எடுத்ததாகத்தானே கூறுவார்கள்; நாட்டிலே அதர்மங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்களையே எப்படி ஆண்டவன் தன் அவதாரமாக அனுப்பியிருக்க முடியும்? என்று சிலர் கேட்கலாம். ‘சிவனால் மட்டும்தான் ‘திருவிளையாடல்கள்’ நடத்த முடியுமா? என்னாலும் நடத்திட முடியும்’ என்று காட்டிட விஷ்ணு நடத்திடும் திருவிளையாடலோ என்னவோஎன்று சில பக்தர்கள் இதற்கு புதுவியாக்யானம் கூட ஒருவேளை தரக்கூடும்.

மோடி இப்படி எல்லாம் பேசுவதை இந்த நாடு ஏற்குமா என்று கேட்டுவிடாதீர்கள்.பல வழக்குகளில் சிக்கி நாடு கடந்து ஓடிவிட்ட நித்யானந்தா கூட தன்னைக் கடவுளின் அவதாரம் என்று கூறித்திரிய வில்லையா? அவரையும் இந்தநாடு ஜீரணித்துக் கொண்டுதானே இருக்கிறது! பெங்களூருவில் சூரியனையே உதிக்க விடாது நாற்பது நிமிடங்கள் தான் தடுத்துவிட்டதாக அந்த மாய்மால கில்லாடி பேசியது வலைதளங்களில் பலநாட்கள் வலம் வந்ததே; அதையும் நம்பிடும் கூட்டம் ஒன்று இருக்கத்தானே செய்கிறது!

இப்போது மோடியாவது தன்னைக் கடவுள் இந்த பூமிக்கு நேரடியாக அனுப்பி வைத்ததாகக் கூறுகிறார்; ஆனால் நித்யானந்தா என்ற எத்துப் பேர்வழி தன்னைத்தானே கடவுள் என்று கூறித்திரிந்து கொண்டிருக்கவில்லையா? ‘தானே சிவன்’ எனக் கூறி சிவன் வேடம் தரித்து பலருக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கின்றதைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு அந்தப் பேர்வழியின் அருள்பாலிப்பை வேண்டுவோரும் இருக்கத்தானே செய்கின்றனர்.

நமது மோடி அவர்கள் இன்னும் அந்த நிலைக்குப் போகவில்லை; போனாலும் ஆச்சரியப்பட ஒன்று­மில்லை! அடுத்து ராமர் வேடம் தரித்து மேடையிலே தோன்றி ‘நானே ராமன்’ என்று மோடி கூறினாலும் கூறக்கூடும்.

ஏற்கனவே மேடைக்குமேடை பல்வேறு வேஷங்களில் காட்சி தரும் அவருக்கு இதுபோன்ற வேடம் போடுவதெல்லாம் ஒன்றும் பெரிய, அரிய காரியமல்ல!

மேலும் மோடியின் குறிக்கோளைத்தான், இன்று கைலாசத்தில் பகவானாக வலம் வந்து கொண்டிருக்கும் நித்யானந்தாவும் தனது குறிக்கோளாகக் கூறிவருகிறார். அதாவது இந்து நாடு ஏன் அவசியம் எனப்பேசி அதனை வீடியோ மூலம் பகிர்ந்தும் கொண்டுள்ளார். சில நேரங்களில் அவர் ஆங்கிலத்தில் பேசும்போது ஒரு தலைப்பாகையும், தமிழில் பேசும்போது வேறொரு தலைப்பாகையும் அணிந்து தோன்றுவதைக் கண்டிருக்கலாம். நமது பிரதமர் மோடி அவர்களும் இப்படித்தான் ஊருக்கு ஒரு தலைப்பாகை அணிந்து காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

மோடி அவர்கள் நித்யானந்தாவைப் போல தன்னை கடவுள் அவதாரமாக இன்று காட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளது நம்முள் பல ஐயங்களை எழுப்பியுள்ளன! இன்று பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிப்பதுபோல பி.ஜே.பி. ஆட்சி அமைக்க முடியாதுபோய், மோடி பிரதமராகும் வாய்ப்பை இழந்துவிட்டால், ஒருவேளை நித்யானந்தாபோல இந்தியாவை விட்டு வெளியேறி புதியநாடு சிருஷ்டித்து அங்கு பிரதமராகவோ அல்லது அந்த நாட்டின் அதிபராகவோ முடிசூட்டிக் கொள்ளும் எண்ணத்தில் இப்படி ஒரு கருத்தினை அறிவித்திருக்கலாம் என்ற யூகத்தையும் நம்மால் புறம்தள்ளிவிட முடியவில்லை!

சிவ பக்தராகத் தன்னைக் கூறிக்கொண்டு பின்னர் தன்னை சிவனின் மறு அவதாரமாகக் கூறி, அடுத்துத் தானே சிவன் என்று கூறித்திரியும் நித்யானந்தா ஒரு கைலாசத்தை சிருஷ்டித்து அங்கே தனது பக்தைகள், பக்தர்கள் சகிதம் ‘‘அருள்(?)’’ பாலித்துக் கொண்டிருக்கிறார்! நமது பிரதமரோ விஷ்ணுவின் அவதாரமான இராமபக்தர்! நாளை ஒருவேளை பிரதமர் பதவி பறிபோய்விட்டால் எப்படி திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் நித்யானந்தாவாகப் பெயர் சூட்டிக் கொண்டு, இந்த நாட்டு மக்களை முட்டாளாக நினைப்பதுபோல, நரேந்திர மோடி­ஜியும், ‘ஜூம்லானந்தா’அல்லது ‘ஜூத் ஆனந்தா’என்ற பெயரை சூட்டிக் கொண்டு தனக்கென ஒரு வைகுண்டத்தை உருவாக்கி அதிலே பால்கடல் அமைத்து ஆதிசேஷன் உருவிலான படுக்கை ஏற்பாடு செய்து அதிலே சயனித்தவாறு அருள்பாலிக்கலாம்; உபசேதங்கள் பல கூறலாம் அவற்றை எல்லாம் வீடியோவாக எடுத்து உலகம் முழுதும் பரவச்செய்யலாம் என்கிற எண்ணத்தில் கூட, தன்னைக் கடவுள்தான் இந்த பூமிக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியிருக்கலாம்.

2001 ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 23 ஆண்டு காலமாக தொடர்ந்து முதலமைச்சர், பிரதமர் என்ற பதவிகளை அனுபவித்து வந்தவரால் எப்படி அந்த சுகத்தை உடனடியாகத் துறக்க முடியும். நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.ஆட்சி அமைக்கும் அளவு வெற்றி பெறும்நிலைஇல்லை என்பது அரசியல் கணிப்பாளர்கள்நோக்கு. மேலும் நடந்து முடிந்துள்ள தொகுதிகளில் பி.ஜே.பி. எதிர்பார்த்த இடங்கள் அந்தக் கட்சிக்கும், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைக்காது என்ற கண்ணோட்டம் உள்ளது. ஒன்றிய அரசின் ஒற்றர்களும் வெளிப்படையாக இந்த நிலைமைகளை பிரதமர் மோடிக்குத் தெரிவிக்க இயலாத நிலையில், இலைமறைவு காய்மறைவாக அவருடைய காதில் போட்டிருப்பார்கள்.

அதன் எதிரொலியாக மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் மோடி மற்றும் அமித்ஷா பேச்சின் தொனிகள் திசை மாறிடத் தொடங்கின. மீண்டும் தங்களது ஆட்சி என்ற மமதையில் மலர்ந்த பேச்சுக்கள், கட்டம் கட்டமாக வாக்குப்பதிவுகள் முடிய முடிய காட்டமானப் பேச்சுக்களாக வெளிப்படத் தொடங்கின.

தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்கள் மீது பொய்ப்பழி சுமத்தி பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் வென்றிடக் கனவு கண்டு கொண்டிருந்தனர். வெறுப்பு அரசியல் தீயை கொளுந்துவிட்டு எரிய வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் இல்லா இந்தியாவைக் கனவு கண்டவர்கள், அதனை ஏறத்தாழ செய்து முடித்துவிட்டதாக நினைத்து இறுமாந்திருந்தவர்கள், காங்கிரசை ராகுல் என்ற இளைஞன் நாடெங்கும் நடைபயணம் சென்று காங்கிரஸ் பேரியக்கத்தைத் தூக்கி நிறுத்தியது கண்டு துவண்டுபோய் தங்களது மனஅரிப்பை ஆத்திரமாக கொட்டத் தொடங்கி விட்டனர்.

இனி வரவே வராது, தலை எடுக்க வாய்ப்பே இல்லை என்றெல்லாம் நினைத்து வாய்நீளம் காட்டியவர்கள் ‘இந்தியா’ அணிக்கு நாட்டில் உருவாகியுள்ள வரவேற்பில் ஆத்திரம் கொண்டு வசைமாறிப் பொழியத் தொடங்கியுள்ளனர்! தமிழ்நாட்டில் வாக்காளர்கள் என்.டி.ஏ. அணியை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையை உணர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் எரிச்சல் தீயை கொட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டனர் – தமிழ்நாட்டை திருடர் பூமியாக சித்தரிக்கும் வகையில் மோடி ஒடிசாவில் பேசுகி­றார்; சம்மந்தா சம்மந்தமில்லாமல் மோடியும், அமித்ஷாவும், தாங்கள் ஒன்றிய அரசின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பதை மறந்து பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறை சாவி திருடுபோய் தமிழ்நாட்டில் உள்ளதாகப் பேசி தங்களது ஆத்திரத்தை அரை வேக்காட்டுத்தனப் பேச்சால் வெளிப்படுத்துகின்றனர்! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புலடோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்று கோமாளித்தனமாய் பேசுகின்றனர்! தொடர்ந்து வரும் மோடி கூட்டத்தின் பிதற்றல்களின் விளைவே இப்போது தன்னைத்தானே கடவுளின் அவதாரமாக மோடி காட்டிக்கொள்வது! இப்படிக் கூறிக் கொள்பவர் பிரதமராக இல்லாமல் வேறு நபராக இருந்திருந்தால் நமது ஊடகங்கள் அவரை என்ன பாடு படுத்தியிருக்கும்; இப்படி கூறியவரது மூளையை பரிசோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்திட வற்புறுத்தியிருக்கும். சனாதனவாதிகள் எப்படி எல்லாம் அந்த நபரை அடித்து துவைத்து வெயிலில் காயப் போட்டிருப்பார்கள்? இது எதுவுமே நடைபெறவில்லையே ஏன் என்பதும் மில்லியன் டாலர் கேள்விதான்!

எது எப்படிபோனால் என்ன; மோடி தொடர்ந்து பதவியை அனுபவிக்க, நித்யானந்தா வழியில் புதிய நாட்டை உருவாக்கி அதில் அரியாசனம் போட்டுஅமர்ந்திடஇப்போதே அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டார்!

ஜெய்... ஜெய்... ஜூம்லானந்தா!

ஜெய்... ஜெய்... ஜூத்ஆனந்தா!

- சிலந்தி

Also Read: ”அந்திமத்தை நெருங்கிவிட்டது இந்திய இட்லரின் ஆட்சி” : முரசொலியில் சிலந்தி கட்டுரை!