Politics

பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை! : நாட்டம் காட்டாத ஒன்றிய பா.ஜ.க அரசு!

கர்நாடகத்தில், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த பா.ஜ.க கூட்டணி கட்சி மக்களவை வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி சிறப்பு விசாரணைக் குழு (SIT) நாளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா இன்று (21.05.24) இந்தியா வரவில்லை என்றால் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்த நிலையிலும்,

இந்த நடவடிக்கை, நீதிமன்றம் மூலம்தான் செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை கூறியது.

இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருக்கின்ற போதும், ஆஜராகாமல் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார் பிரஜ்வல் ரேவண்ணா.

இதனால் நீதிமன்றம் மூலம் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு விசாரணைக்குழு முயற்சித்து வருகிறது.

நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு விசாரணைக்குழு கூறிய காரணங்களாக,

பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வல் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன.

3 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் பரவி வருகின்றன, அவை விசாரிக்கப்பட வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க முன் வருகின்றனர்.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிறப்பு பாஸ்போர்ட் வசதி உள்ளது. இது அவர் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் சென்று தலைமறைவாகவும் மறைவாகவும் இருக்க வழி வகுக்கும் ஆகியவை அமைந்துள்ளன.

Also Read: “திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தலாமா?” - மோடிக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்!