Politics

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. நாளை (மே 20) 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர்.

இதற்கு கண்டனங்கள் எழுந்தபோதிலும் மோடி தனது பேச்சை நிறுத்தவில்லை. மோடியை தொடர்ந்து பாஜக ஆதரவாளர்களும் அதையே செய்கின்றனர். அந்த வகையில் பாஜக ஆதரவாளர் ஒருவர் இதுபோன்ற அவதூறு பரப்பி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

BhikuMhatre (எ) வினித் நாயக் என்ற பெயர் கொண்ட இணையவாசி ஒருவர், பாஜகவுக்கு ஆதரவாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இவர் பாஜகவுக்கு ஆதரவாக மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் போலியான செய்திகளையும் பரப்பி வருகிறார். அதோடு இஸ்லாமியர்கள் குறித்தும் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இஸ்லாமியர்கள் குறித்தும், காங்கிரஸ் குறித்தும் வெறுப்பை விதைக்கும் வகையில் போலியான விஷயத்தை பதிவிட்டார். இந்த சூழலில் இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்தது. அந்த புகாரின் அடிப்படையில் இவரை தற்போது கர்நாடக சைபர் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாஜக ஆதரவாளர் வினித் நாயக் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக தலைவர்கள் ஸ்மிருதி இரானி, தேஜஸ்வி சூர்யா, அமித் மாளவியா உள்பட பாஜக தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். போலி செய்தி பரப்பி வரும் ஒருவருக்கு பாஜக இப்படி வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

Also Read: கட்டுகடுங்காத கூட்டம்: உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு பெருகும் ஆதரவு -விழிபிதுங்கி நிற்கும் பாஜக!