Politics

“இது பிரதமர் பதவிக்கான தகுதியா?” - இந்தியா கூட்டணி குறித்து மோடியின் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலைப் புல்டோசர் கொண்டு இடிப்பார்கள் என்று மோடி பேசுவது, அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கான தகுதிதானா? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், தோல்வி பயத்தில் பேசுகிறார் - மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயக ஆட்சி இருக்காது - சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறும் - மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கை வருமாறு:

நாட்டின் பொதுத் தேர்தலை (ஏழு கட்டங்களாக) நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது ஏன்? யாருக்கு வசதியாக, யாருக்கு வசதியின்மையை ஏற்படுத்த என்பது இப்போது உலகறிந்த செய்தியாகி, மக்களிடையேயும் விழிப்புணர்வுடன் கூடிய விவாதப் பொருளாகி வருகிறது!

உச்சநீதிமன்றத்தின் கூர்மையான கேள்விகள்! :

உச்சநீதிமன்றமும் தேர்தல், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கைபற்றி ஒரு சில வழக்குகளில் தனது கூர்ந்த பார்வையைப் பதித்து, துளைத்தெடுக்கும் கேள்விகளையும் கேட்டு வைப்பது, தேர்தல் ஆணையமும் உணர்ந்துதான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது!

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சிதான்! :

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் மதச்சார்பின்மை, சம தர்மம், ஜனநாயகம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானங்களை அகற்றுவது போன்ற பல நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருவதோடு, பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி ஆளும் அரசு - பட்டாங்கமாகவே எதேச்சதிகார - ஹிந்துத்துவ - ராஷ்டிரமாக நாட்டை ஆக்கி, நமது நாட்டின் பன் மத, பல கலாச்சார, பல மொழிகளை அங்கீகரித்து, அதில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய அரசமைப்புச் சட்ட கர்த்தாக்கள் குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் போன்ற பெருந்தகையாளரின் பெருநோக்கினை குழிதோண்டிப் புதைக்கவே மீண்டும் ஆட்சிக்கு மூன்றாவது முறையாக வந்தால், நாடு பகிரங்கமாகவே சர்வாதிகாரச் சதிராட்ட ஆட்சியைத்தான் சந்திக்கும் அவலம் ஏற்படுவது உறுதி என்பதாலும்,

‘மோடிக்கீ கியாரண்டி’ என்ன ஆனது? :

ஏழை, எளிய விவசாயிகள், தொழிலாளர்கள் படித்தும் வேலை கிட்டாது அலையும் விரக்தியில் வாழும் கோடிக்கணக்கான இளைஞர்கள், வேலை வாய்ப்பின்மையாலும்,

‘‘விலைவாசியைக் குறைப்போம்;

வறுமையை விரட்டி அடிப்போம்‘’

என்றும், ‘‘மோடிக்கீ கியாரண்டி’’ என்றெல்லாம் மார்தட்டிக் கூறியவை காற்றில் பறந்த வார்த்தைகளாக - கானல் நீர் வேட்கையாக முன்பு வாக்குப் போட்டவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கி விட்டதோடு,

‘நாரி சக்தி’பற்றிப் பேசும் பிரதமர் மோடி, மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஓடவிட்டபோது, ஒரு ஆறுதல் வார்த்தை கூறியதுண்டா? :

மகளிரை ஒருபுறம் ‘நாரி சக்தி’ என்று ‘புனித பூஜை அர்ச்சனை’ செய்துகொண்டே, மறுபுறம் மணிப்பூர் பழங்குடி மகளிரை நிர்வாணப்படுத்தி, நெடுந்தூரம் ஓடச் செய்த மனிதநேய மற்ற ஆட்சி - அவர்களைப் பார்த்து, ஆறுதல் வார்த்தைக் கூட கூறாது, வாய் நீளம் காட்டும் ஒரு பிரதமரின் - மோடி ஆட்சியின்மீது தெற்கே மட்டுமல்ல, வடகிழக்கே, வடக்கே, மேற்கே என்று திசை எட்டும் தெளிவு ஏற்பட்டு, ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் மக்கள் ஆதரவு - நடைபெற்ற நான்கு கட்டங்களிலும் ஆளும் தரப்புக்கு நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டு விட்டது. வெற்றி வாய்ப்பு மங்கி வருவதை உணர்ந்ததோடு, தோல்வி பயத்தின் உச்சத்தினை நோக்கிச் செல்லும் நிலை - ஆளும் பா.ஜ.க.வின் கோஷ்டிச் சண்டை பல் குழு வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன.

இதனால் பா.ஜ.க.வின் முதன்மையானவரும், முடிவானவரும், தேர்தல் பிரச்சாரகருமான பிரதமர் மோடியின் பேச்சு அபத்தங்களின் கூட்டல்களாகி வருகின்றன நாளுக்கு நாள்! He is desperate - நம்பிக்கை இழந்தவர், கடைசியாக உ.பி. போன்ற மதவாத உணர்வை மூலதனமாக வைக்க முயலுகிறார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் - ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடிப்பார்களாம் - பிரதமர் கூறுகிறார்! :

‘‘இந்தியா கூட்டணியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், புதிதாக அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்குவார்கள். மீண்டும் ‘பால ராமனை’ கூடாரத்திற்குள் (டெண்ட்) போடவேண்டியிருக்கும்; ஆதலால், அவர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள்’’ என்று சட்ட வரம்பு மீறிய - தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய ஒரு பொய்யைத் தேர்தல் பரப்புரையில் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி! எப்படிச் சிரிப்பதோ தெரியவில்லை!

இடிப்பது - இடித்தது யாருக்குக் கைவந்த கலை என்பதை உலகறியும். பாபர் மசூதியை கடப்பாரைகளைத் தூக்கி இடித்தவர்கள் யார் என்பதை நாடாறியும்! கடைசி கட்டத்தில் மக்களை நம்புவது பயன்தராது என்று, இராமரைக் காட்டி- அபாண்டமாக, இப்படி ஓர் அர்த்தமற்ற குற்றச்சாட்டைக் கூறுவது, ஒரு பிரதமருக்கு, அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர முடியுமா?

பொய்க்கால் குதிரை ஆற்றைக் கடக்க உதவாது! :

நாளும் நம்பிக்கை இழந்து வருகிறார் மோடி!

நாளும் அவரது பிரச்சாரம், பலவீனத்தின் பகிரங்க ஒப்புதலை - தோல்வியை மறைக்க இப்படிப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாற்றை அள்ளி வீசுகிறார்! முன்பு, 1971 இல் தமிழ்நாட்டில் எப்படி அது தேர்தல் பிரச்சினையாக்கப்பட்டு, மகத்தான தோல்வியைத் தந்ததோ, அதே நிலை வடக்கின் தீர்ப்பாகவும் அமையப் போவது உறுதி!

இந்தியா கூட்டணியின் திட்டங்களைக் குறை கூறுகின்றது பா.ஜ.க. - அதன் பிரதான பிரச்சாரகரரான மோடி, திட்டுகளை - வசவுகளை - ஆதாரமற்ற கற்பனை குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறார்; பொய்யை மட்டுமே நம்புகிறார்! இந்தப் பொய்க்கால் குதிரை, தேர்தல் ஆற்றைக் கடக்க ஒருபோதும் அவர்களுக்கு உதவி செய்யாது என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!

Also Read: “இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !