Politics

வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியாக தேர்தலை சந்திக்கின்றன. இதனால் பாஜக கடும் அச்சத்தில் உள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டம், ராஜ்புத் சமூகத்தினின் போராட்டம் என இந்த தேர்தல் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மதம், இனம் என அனைத்தையும் பயன்படுத்தி பிரதமர் மோடி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என்று கூறினார்.

இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதையும், தென் மாநிலங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்குவதையும் குறிப்பிட்டே பாஜக அரசை விமர்சித்து வந்தனர். ஆனால் பிரதமர் மோடி தென்னிந்தியர்கள் வட இந்தியர்களை பற்றி அவதூறாக பேசுவதாக பிரிவினை எண்ணத்தை விதைத்து வருகிறார்.

இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும் வட இந்தியர்கள் இடையே பிரிவினையை உண்டாக்கும் செயல் என சமூக வலைத்தளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் மோடிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.