Politics

140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பிரதமராக ஆட்சி புரியும் மோடி, எடுத்த எடுப்பிற்கெல்லாம், 140 கோடி மக்களின் நிகராளி (பிரதிநிதி) என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

நேற்றைய நாள் (மே 15) மகாராஷ்டிரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட, “140 கோடி மக்களின் ஆதரவு தான், என்னுடைய வலிமை” என தெரிவித்தார்.

அதற்கு முந்தைய நாள் (மே 14) அன்று, India TVக்கு அளித்த பேட்டியில், “என்னை சர்வாதிகாரி என அழைத்து, 140 கோடி மக்களை இழிவுபடுத்தியுள்ளனர் எதிர்க்கட்சியினர்” என பதிவு செய்துள்ளார் மோடி.

இந்நிலையில், உண்மையாகவே மோடி, 140 கோடி மக்களை தன்னுடன் ஒப்பிட்டுக்கொள்ள தகுதியானவர் தானா என்ற கேள்வி எழத்தொடங்கியுள்ளது.

காரணம், கடந்த 2019 மக்களவை தேர்தலில், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் பா.ஜ.க பெற்ற வாக்கு விழுக்காடு 37.36.

அதாவது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.2 கோடி. அதில் வாக்களித்தவர்கள் 67 விழுக்காடு பேர். அதாவது 61.3 கோடி பேர்.

அந்த 61.3 கோடி பேரில் 37.36 விழுக்காட்டினரே பா.ஜ.க.வை தேர்வு செய்துள்ளனர். அதாவது 22.9 கோடி பேர்.

140 கோடியில் 22.9 கோடி என்பது 20 விழுக்காட்டை விட குறைவு. அப்போது, இந்தியாவின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டை விட குறைவானவர்களே ஆதரவு தந்த பா.ஜ.க,

மற்ற 117.1 மக்கள், மோடியையே ஆதரிப்பது போல், பேசி வருவது எவ்விதத்தில் சரியாக இருக்கும் என்பது தான்.

இதன் வழி, 117.1 கோடிக்கும், 22.9 கோடிக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத போது, 22.9 கோடி மக்களின் ஆதரவை பெற்று பிரதமராக பதவி வகிக்கும் மோடி, மற்ற 117.1 கோடி மக்களை சொந்தம் கொண்டாடி வருவது, அரசியல் சூழ்ச்சியே என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

ஆனால், அந்த 22.9 கோடி என்ற எண்ணிக்கையையும் சிதைக்கும் விதத்தில், இந்தியா கூட்டணியின் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு இருக்கிறது.

இதனால், நடப்பு தேர்தலின் வழி, இருக்கின்ற ஆதரவும் அடிப்பட்டு போகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

எனவே, பா.ஜ.க கூறிவந்த ‘400 இடங்களில் வெற்றி பெறுவோம்’ என்ற கூற்று காணாமல் போனது போல, ‘140 கோடி மக்களின் நிகராளி மோடி என்பதும் காணாமல் போக வேண்டிய தேவை உருவாகியுள்ளது’ என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !