Politics
நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு : 11 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - முழு விவரம் !
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் நரேந்திர தபோல்கர் (Narendra Dabholkar). மருத்துவர் மற்றும் எழுத்தாளராக இருந்த இவர், சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு எதிராக போராடவும் செய்தார். குறிப்பாக மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வந்தார். இதற்காக கழகம் ஒன்றையும் உருவாக்கினார்.
அதில் மக்கள் பலரையும் இணைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இவரது செயல்பாடு பிடிக்காமல் இந்துத்வ அமைப்பை சேர்ந்த பலரும் இவருக்கு எதிராக பல செயல்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இடைவிடாமல் மூட நம்பிக்கைக்கு எதிராக தனது போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
மேலும் அம்மாநில சட்டமன்றத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக மசோதாவை கொண்டு வரவும் முனைப்பு காட்டினார். ஆனால் இந்த மசோதா இந்து நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று பாஜக, சிவசேனா கட்சிகள் கருத்துகளையும், கண்டனங்களையும் முன்வைத்தால் இது கிடப்பில் போடப்பட்டது. எனினும் தனது முயற்சியை விடாமல் அவர் மேற்கொண்டு வந்தார்.
இவருக்கு எதிராக இந்துத்வ அமைப்பை சேர்ந்த சிலர் மிரட்டல்கள் விடுத்தனர். இந்த சமயத்தில் கடந்த 2013, ஆகஸ்ட் 20-ம் தேதி நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நரேந்திர தபோல்கர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மரணம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காலை நேரத்தில் பொதுவெளியில் சமூக செயற்பாட்டாளர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆரம்பத்தில் மாநில போலீசிடம் இருந்த இந்த வழக்கு விசாரணையானது, மும்பை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் CBI-க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த மருத்துவர் ENT அறுவை சிகிச்சை நிபுணர் வீரேந்திர சிங் தாவ்டே என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து இது தவிர சச்சின் ஆண்ட்ரே, சரத் கலஸ்கர், விக்ரம் பாவே, சஞ்சீவ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு தற்போது புனே நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இதில் குற்றவாளியாக 2 பேர் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதாவது இந்த வழக்கில் கைதான சச்சின் ஆண்ட்ரே மற்றும் சரத் கலாஸ்கர் ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ.5 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மீதமிருக்கும் ENT அறுவை சிகிச்சை நிபுணர் வீரேந்திர சிங் தாவ்டே, விக்ரம் பாவே, சஞ்சீவ் ஆகிய 3 பேருக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் வீரேந்திர சிங் தாவ்டேதான் மூளையாக இருந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நரேந்திர தபோல்கர் கொலைக்கு பிறகு அடுத்தடுத்து என்று ஒரு சில ஆண்டுகள் இடைவெளியில் மகாராஷ்டிராவை சேர்ந்த CPI கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே (Govind Pansare), கர்நாடகாவை சேர்ந்த சனாதன கொள்கைக்கு எதிராகவும், இந்துத்வ பாஜகவுக்கு எதிராகவும் இருந்த எம்.எம்.கல்புர்கி, பிரபல பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் ஒரே பாணியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கையும் CBI விசாரித்து வருகிறது. இவர்களுக்கான கொலையில் ஒரே பின்னணியா என்று விசாரிக்க CBI-க்கு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?