Politics

பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில், வளர்ச்சிகள் என சொல்லும்படி எதுவும் இல்லாத காரணத்தால், வளர்ச்சியை எடுத்துக்கூறி, வாக்குகளை சேகரிக்க முடியாது என உணர்ந்த மோடியும், அவரது கட்சியும், பல புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு, மக்கள் சொத்துகளை சூரையாடிவிடுவர் என்ற பொய் பிரச்சாரங்கள் அதற்கு எடுத்துக்காட்டுகளாகவும் அமைந்துள்ளன.

இந்நிலையில், உள்நாட்டில் செய்த கலவரங்கள் போதாது என்று, அண்டை நாடான பாகிஸ்தானை இழுத்து, வாக்குகளைப் பெற எண்ணும் பா.ஜ.க.வின் திட்டம், நேற்றைய நாள் (07.05.24) வெளியான நாளிதழில் இடம்பெற்ற பா.ஜ.க.வின் விளம்பரம் வழி அம்பலப்பட்டுள்ளது.

அவ்விளம்பரத்தில், நீங்கள் வாக்களிக்கப்போவது இந்தியாவிற்கா அல்லது பாகிஸ்தானிற்கா? என்ற கேள்வியுடன், பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவேண்டும் என்ற முன்மொழிவும் இடம்பெற்றது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராய் அமைந்தது சர்ச்சையாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, சின்னத்தை வெளிப்படுத்தும் விளம்பரங்களும், இந்த குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்களும் அறவே கூடாது என்ற நிலை உள்ள போதிலும், அத்தகைய தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகிறது பா.ஜ.க.

இது குறித்து, சிவசேனா (தாக்கரே) MP பிரியங்கா சதுர்வேதி, “சற்றும் பொருளற்ற வகையில், இந்திய மக்களவை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க பாகிஸ்தானை பகடையாக பயன்படுத்துவது சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில்,

- யார் பாகிஸ்தான் பிரதமருடன் பிரியாணி உண்டது?

- யார் பாகிஸ்தான் பிரதமர் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினராக சென்றது?

- யார் பதவி பிரமாணம் செய்யும் போது, பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்தது?” என மோடியின் கடந்த கால செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “3ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, தேர்தல் விதிமுறைகளை மீறும் விதத்தில் செய்தித்தாளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது பா.ஜ.க. மராத்தியில் தரப்பட்டுள்ள இவ்விளம்பரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்று, தேர்தல் நேரங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி, மோடி அரசு செய்யும் விதிமீறல்களையும், அதனை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையத்தின் மந்தமான நடவடிக்கைகளையும், மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Also Read: குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!