Politics

குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகளின் உள்ளீடுகளே இருக்க கூடாது என்பதற்காக, இந்தியா கூட்டணியில் இரு முதல்வர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பா.ஜ.க.

அவ்விரு முதல்வர்களில் ஒருவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை திட்டத்தில் சுமார் ரூ. 100 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்றொருவரான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலம் மற்றும் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இவ்விருவர்களுக்கும் பொதுவாக அமைந்தது என்ன வென்றால், இருவர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவை. இருவரும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு கடும் அச்சுறுத்தலாய் விளங்கியவர்கள் என்பதே.

இந்நிலையில், குற்றங்கள் நிரூபிக்கப்படாத சூழலிலும், மாதக்கணக்கில் சிறையில் அடைபட்டிருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனும் தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.

எனினும், தேர்தல் வரை அவர்களை விடுவிக்க கூடாது என்ற திட்டத்தில் இருக்கும் பா.ஜ.க.வின் மறைமுக செயல்பாடுகளால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் வழக்குகள் நீதிமன்றங்களால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, குற்றங்கள் நீரூபிக்கப்படாத நிலையிலும், முதல்வர்கள் என்ற அதிகாரம் படைத்த நிலையிலும், அவர்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க.

தங்களது தேர்தல் நலனுக்காக, பாலியல் வன்முறை, கையெறிகுண்டு, AK 47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தின் பிரபல குற்றவாளி ஆனந்த் சிங் என்பவருக்கு 15 நாட்கள் பிணை வழங்கி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளது பா.ஜ.க.

பிணையில் விடுதலையான ஆனந்த் சிங் என்பவர், UAPA (உபா) சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். அதாவது எளிதில் பிணை அளிக்க இயலாத வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், குற்றவாளிக்கு பிணை வழங்கப்படுவதும், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு பிணை வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதும், பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியலை வெளிப்படுத்துகிறதோடு மட்டுமல்லாமல், நாட்டின் ஜனநாயகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என தேசிய அளவில் பா.ஜ.க.விற்கு கண்டனங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன.

Also Read: "அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் பா.ஜ.க" : சோனியா காந்தி MP குற்றச்சாட்டு!