Politics

காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!

நாட்டை முன்னோக்கி எடுத்து செல்கிறோம். பெண் வலிமைக்கு முக்கியத்துவம் தருகிறோம் என வெளிக்காட்டி கொள்ளும் மோடி, உண்மையில் அதில் பகுதி அளவு கூட செய்வதில்லை என்பது மணிப்பூர் நிகழ்வின் வழி வெளிப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 3 ஆம் நாள் தொடங்கிய, மெய்தி - குகி, சூமி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில், இதுவரை
சுமார் 230க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, வீடற்றவர்களாகியுள்ளனர். சுமார் 4000 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளது.

இந்நிலையில், கலவரம் தொடங்கி ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையிலும், கலவரம் மட்டும் முடிவுறாமல் இருக்கிறது. அதற்கு மணிப்பூரில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வும், ஒன்றிய பா.ஜ.க.வும் பல வகையில் காரணமாக இருக்கின்றன.

அதில் மோடி பார்வையிடாததும் ஒரு காரணமாக இருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறவர், அந்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையில் பெருமை கொள்கிறாரோ, அதனை விட ஒரு படி மேல் சென்று, நாட்டில் நிகழக்கூடிய சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுவது இன்றியமையாதது.

ஆனால், இந்தியாவின் பிரதமரோ, மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதையும், தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க ஊர் ஊராக செல்வதையும், வெறுப்பு பேச்சுகளை அள்ளி விடுவதிலும் மட்டுமே கவனம் கொள்பவராக இருக்கிறார்.

அதன் படி, மணிப்பூர் கலவரம் தொடங்கிய பிறகு, அதிகாரப்பூர்வ பயணங்களாக, 162 முறை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளார் மோடி. எனினும், அந்த 162-ல் ஒரு முறை கூட மணிப்பூருக்காக நேரம் ஒதுக்க இயலாமல் போயுள்ளது.

ஆனால், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக, ஒரே ஆண்டில் 8 முறையும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு 10 முறையும், நாடாளுமன்றத்தில் அதிகளவு மக்களவை உறுப்பினர் வலு கொண்ட உத்தரப் பிரதேசத்திற்கு 17 முறையும் பார்வையிட சென்றுள்ளார்.

இவை தவிர்த்து, இந்தியாவை விட்டு, வெளிநாடுகளுக்கும் 14 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி. அதில் ஒரு முறை, ஐக்கிய அமீரகத்தில், கோவில் திறப்பிற்காக சென்றுள்ளார்.

இதனால், மக்களை பற்றி சிந்திக்காத மோடியின் செயலில் விரக்தி அடைந்த மணிப்பூர் மக்கள், “மோடியை காணவில்லை” என சுவரொட்டி ஒட்டும் அளவிற்கு சென்றுள்ளனர்.

அச்சுவரொட்டியில், பெயர் : நரேந்திர மோடி; உயரம் : 5’6” அடி ; மார்பளவு : 56” ; கண் பார்வையற்றவர் ; காது கேளாதவர் என்றும், கடைசியாக பார்த்த இடம் என்பதில், கடந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து நெட்டிசன்கள், சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள தகவல் கேலிக்குரிய வகையில் அமைந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டது போலவே, பிரதமர் மோடியின் செயல்கள் அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!