Politics

இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!

ஒன்றியத்தில் ஆட்சி வகித்தால், நாங்கள் சொல்பவர் தான் நிரபராதி, நாங்கள் சொல்பவர் தான் குற்றவாளி என்ற எண்ணத்தை, பல செய்திகளில் நிரூபித்து காட்டி வருகிறது பா.ஜ.க.

அவ்வகையில், மக்களவை தேர்தலில் இடையூராக இருப்பார்கள் என்று, தேர்தல் நேரத்தில், தகுந்த ஆதாரங்களற்ற நிலையிலும், இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்துள்ளார்கள் காவி கட்சியினர்.

அதே நேரம், வாக்கு வங்கியில் அடிபட்டு விட கூடாது என்ற நோக்கில், ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விடையாடினால் என்ன, மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று பிரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக்கி, அவருக்காக பிரச்சாரமும் மேற்கொள்கிறது பா.ஜ.க.

இதற்கு, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவை தான் துணை போகின்றன என்றால்,

இந்திய ஜனநாயகத்தை நிறுவுவதில் பெரும் பங்கு வகிக்கிற, நடுநிலைத்தன்மையை நிரூபிக்க வேண்டிய தேர்தல் ஆணையமும் அவ்வப்போது பா.ஜ.க.விற்கு துணை போய் கொண்டிருக்கிறது.

இதனால், பலகோடி கடன் வாங்கிய முதலாளிகளும், குற்றவாளிகளும் வெளிநாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் சூழலும், உண்மையை உரக்க பேசுபவர்கள் சிறையில் காலம் கழிக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும் போதெல்லாம், அது குறித்து மோடி வாய் திறந்ததில்லை. அது போலவே, தற்போது ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த பிரஜ்வல் ரேவண்ணா குறித்தும் வாய் திறக்காமல் இருக்கிறார் மோடி.

ஒருவேளை இது தான் அவர்கள் கூறும் மோடியின் குடும்பமா? இந்த குடும்பத்தில் உள்ளவர்களை குற்ற பின்னணியிலிருந்து மீட்பது தான் இவர்கள் வேலையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்காத பா.ஜ.க மூத்த தலைவர் அமித் ஷா, சற்றும் தொடர்பற்ற வகையில் பிரஜ்வல் மீது கர்நாடக காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக சிறப்பு விசாரணைக்குழு அமைத்ததும், பிரஜ்வால் பாஸ்போர்டை முடக்கி, இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியதும் எவ்வளவு எளிமையாக அமித் ஷாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என மக்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

எனினும், இச்சம்பவம் குறித்து, மோடி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவதும், சர்ச்சையாகியுள்ளது.

Also Read: ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !