Politics

வெள்ள நிவாரணம் : “தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்” - ஒன்றிய பாஜக அரசுக்கு CPI கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மிக்ஜாம்' புயல் ஏற்பட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன.

அதேபோன்று, இது முடிந்த அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் பேருதவி செய்தனர்.

இதையடுத்து மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிடும் வகையில் ஒன்றிய அரசு உடனே தேசிய பேரிடர் நிவாரண நிதி 37,907 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஆனால் ஒன்றிய அரசு தாமதம் செய்த நிலையில், தமிழ்நாடு அரசே தனது நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையை அறிவித்தது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தினர். அதேபோல் தமிழ்நாடு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கோரியிருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காமலிருந்தது.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் ரூ. 276 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மோடிக்கு தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருகின்றது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மாநில அரசின் வருவாய் ஆதாரங்களை வெட்டிக் குறைத்தது. இழப்பீட்டு நிதி மேலும் சில ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க மறுத்து வருவது ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது. அவசர காலத் தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுப்பது என்று தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசு, தமிழ்நாடு இயற்கை பேரிடர் தாக்குதலால் பேரிழப்பை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசீனப்படுத்தி, அவதூறு பரப்பு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலில் ஈடுபட்டதை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறந்துவிட மாட்டார்கள்.

மிக்ஜாம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக ஒன்றிய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. ரூ.37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர்படுத்த தேவை என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் ஒன்றிய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும். பாஜக ஒன்றிய அரசின் பாரபட்சம் காட்டி, பழிவாங்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

Also Read: ”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!