Politics

இந்து கோவில்களில் அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்படுவது மோடிக்கு தெரியுமா ? - காங்கிரஸ் கேள்வி !

பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது . கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு என எந்த நல்ல திட்டங்களையும் பாஜக கொண்டுவராததால் இந்த தேர்தலில் வெல்ல ராமர் கோவிலை பாஜக கையில் எடுத்தது.

இதற்கு ஆரம்பத்தில் வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு நிலவிய சூழலில், இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கொக்கரித்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஊழல் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது. இதனால் 200 தொகுதிகளில் கூட பாஜக வெற்றிபெறாது என்று கூறப்படுகிறது.

இதனால் கடும் அச்சமடைந்த பிரதமர் மோடி,வெற்றிபெறவேண்டும் என மதத்தை முன்வைத்து எதிர்கட்சியினரை விமர்சித்து வருகிறார். அந்த வகையில், நவராத்திரி மாதங்களில் அசைவ உணவை சாப்பிடுகிறார்களே என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை பிரதமர் மோடி விமர்சித்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு கோவில்களில் அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்படுகிறது, இது எல்லாம் இந்து மதத்தில் வராதா என எதிர்க்கட்சியினர் மோடியை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளனர். கேரளாவில் மலபார் தேவசம் போர்டுக்கு கட்டுப்பட்ட திருவேற்காடு மடாயி காவு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இங்கு முன்னர் கால்நடைகளை பலியிடுதல் வழக்கமாக இருந்த நிலையில், தற்போது அம்மனுக்கு கோழியை பலியிட்டு அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். மேலும், நவராத்திரி கொண்டாடும் மேற்கு வங்க மக்கள் துர்கை அம்மனுக்கு மீன்களை படையிலடுவதும் இந்து பண்பாடுதான் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது. அதே போல, புனித மாதங்களில் அசைவம் சாப்பிடுவதை விமர்சிக்கும் மோடி, ஒருமுறையாவது மடாயி காவு கோவிலுக்கு வர வேண்டும் என சி.பி.ஐ.எம் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.